”அதிமுக தனது கொள்கையை மாற்றிக்கொள்ள வேண்டும்” - திருமாவளவன்

திங்கள், 3 ஆகஸ்ட் 2015 (16:45 IST)
அதிமுக தனது கொள்கையை மாற்றிக்கொண்டு மதுவிலக்கை அமுல்படுத்த வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.
 
மதுஒழிப்பு வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களை தொடர்ந்து நடத்திய சசி பெருமாள், கடந்த வெள்ளிக்கிழமை [31-07-15] செல்போன் டவர் மீதேறி போராட்டம் நடத்தியபோது மரணமடைந்தார். இதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகின்றது.
 
இந்நிலையில், தொல்.திருமாவளவன் நாளை தமிழகம் முழுவதும் நடைபெறவுள்ள கடையடைப்பிற்கு வைகோ, திருமாவளவன் உள்ளிட்டோர் பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளனர். இந்த கடையடைப்பிற்கு தேமுதிக, கம்யூனிஸ்ட் கட்சிகள், பாஜக உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. திமுக, பாமகவும் போராட்டத்தில் பங்கேற்பதில்லை என்று முடிவெடுத்திருக்கின்றன.
 
இந்நிலையில் இது குறித்து கூறியுள்ள திருமாவளவன், “நாளை நடைபெற இருக்கும் பூரண மதுவிலக்கு போராட்டத்திற்கு தேமுதிக, காங்கிரஸ், வணிகர் சங்கங்கள் மற்றும் பால் நுகர்வோர் சங்கம் ஆகியவை ஆதரவு தெரிவித்து உள்ளன. அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.
 
பாமக தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும். திமுக இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்று வெளிப்படையாக கோரிக்கை விடுக்கிறோம். சசிபெருமாள் உயிர் இழந்த சூழ்நிலையில் அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக இந்த போராட்டம் நடத்தப்படுகிறது.
 
பாமகவுக்கு உண்மையிலேயே பொதுமக்கள் மீது அக்கறை இருந்தால் இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்திருக்க வேண்டும். இது அவர்களது இரட்டை நிலையை காட்டுகிறது. அதிமுக தனது கொள்கையை மாற்றி கொள்ள வேண்டும். மாநில அரசு படிப்படியாக மது விலக்கை அமுல்படுத்த வேண்டும்” என்று கூறியுள்ளார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்