அதிமுக சட்ட மன்ற உறுப்பினருக்கு அடிஉதை

புதன், 6 மே 2015 (17:19 IST)
புதுவை, மடுகரையில் நடைபெற்ற கூத்தாண்டவர் கோவில் திருவிழாவின் போது, அதிமுக சட்டமன்ற உறுப்பினர் பெரியசாமிக்கு அடி உதை விழுந்த சம்பவம் புதுவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
புதுவை மாநிலம், மடுகரையில் கூத்தாண்டவர் கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது. இவ்விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது. அப்போது அங்கு வந்த,  அதிமுக சட்ட மன்ற உறுப்பினர் பெரியசாமி, தனக்கு முறையான அழைப்பு வரவில்லை என, கோவில் நிர்வாக குழுவினரிடம் கேட்டார். இதற்கு கோவில் நிர்வாகம் மறுத்தது. இரு தரப்புக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
 
இதனால் கோபம் அடைந்த சட்ட மன்ற உறுப்பினர் பெரியசாமி தனது ஆதரவாளர்களுடன்  தேர் முன்பு அமர்ந்து திடீர் மறியலில் ஈடுபட்டார். அவர்களை அப்புறப்படுத்த சிலர் முன்றனர். இதனால், இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டு, ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இதில் அதிமுக  சட்ட மன்ற உறுப்பினர் பெரியசாமியை சிலர் அடித்து உதைத்தனர். அந்த இடமே போர்க்களம் போல் காணப்பட்டதால், காவல்துறையினர் தடியடி நடத்தி கும்பலை கலைத்தனர்.   
 
இதனால் ஆவேசம் அடைந்த எம்எல்ஏ பெரியசாமி  தனது ஆதரவாளர்கள் 150 பேருடன் மந்தைவெளி திடல் சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டார். 
 
அவருக்கு ஆதரவாக அதிமுக மாநில செயலாளர் புருஷோத்தமன்,  எம்எல்ஏ ஓம்சக்திசேகர் உள்ளிட்டவர்களும் சாலை மறியலில் குதித்தனர். காவல்துறையின் நீண்ட நேர பேச்சுவார்த்தைக்கு பிறகு அதிமுகவினர் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.  
 
இந்த பிரச்சனை காரணமாக கோவில் தேர் நடுவழியில் சுமார் 2 மணி நேரம் நிறுத்திவைக்கப்பட்டது. பிரச்சனை முடிந்த பிறகு மீண்டும் தேர் இழுக்கப்பட்டது. 
 
புதுவை, அதிமுக சட்ட மன்ற உறுப்பினர் பெரியசாமி மீது தாக்கல் நடத்தியவர்கள் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என புதுவை அதிமுக கோரிக்கை விடுத்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்