லஞ்சம், ஊழலை தடுப்பதில் அதிமுக அரசு தோல்வி - கருத்துக் கணிப்பு தகவல்

திங்கள், 31 ஆகஸ்ட் 2015 (11:38 IST)
லஞ்சம், ஊழலைக் கட்டுப்படுத்துவதிலும், குடிப் பிரச்சனையை கையாள்வதிலும் அதிமுக அரசு தோல்வியடைந்துள்ளதாக மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
 
லயோலா கல்லூரி ‘மக்கள் ஆய்வு’ என்ற அமைப்பு நடத்திய ஆய்வில் இந்த தகவல் வெளியாகி உள்ளது. இந்த மையத்தின் ஆசிரியர் பேரா. ச.ராஜநாயகம் குழுவினர் நடத்திய ஆய்வின் முடிவுகளை சனிக்கிழமையன்று (ஆக.29) சென்னையில் வெளியிட்டார்.
 
அதில் அவர், “அரசு அலுவலகங்களில் லஞ்சம் வாங்காமல் வேலைகள் நடப்பதில்லை. இப்பிரச்சனையை அரசு முறையாக கையாளவில்லை என்று 74 விழுக்காடு மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்” என்றார்.
 
“அரசுத்துறைகளுக்கு ஒளிவு மறைவின்றி, மூப்பு அடிப்படையில் ஆள் எடுப்பதில்லை என்று 88 விழுக்காட்டினரும், குடிப்பிரச்சனையை கையாள்வதில் அரசு மோசமாக செயல்படுகிறது என்று 78 விழுக்காட்டினரும்” கருத்து தெரிவித்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
 
முன்னதாக, மக்கள் ஆய்வகம் தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார் என்ற கருத்துக்கணிப்பை நடத்தியது. இக்கருத்துக்கணிப்பில் அதிமுகவுக்கு 34.1% மக்களும், திமுகவுக்கு 32.6% மக்களும், தேமுதிகவுக்கு 4% மக்களும், பாமகவுக்கு 3% மக்களும், பாஜகவுக்கு 2.9% மக்களும் ஆதரவு தெரிவித்தனர்.
 
யார் முதலமைச்சராக வருவார் என மக்களிடம் கேட்ட கேள்விக்கு ஜெயலலிதா என 31.56% மக்களும், ஸ்டாலின் என 27.98% மக்களும் கருத்து தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்