பேரறிவாளனின் உடல் நிலை காரணமாக அவரை பரோலில் சில நாட்கள் விடுமாறு அவரது சார்பில் பரோலுக்கு விண்ணப்பிக்கப்பட்டது. ஆனால் பேரறிவாளனை பரோலில் விட முடியாது என சிறை நிர்வாகம் மறுத்துவிட்டது. ஆனால் அவரது தாயார் அற்புதம்மாள் இதனை தமிழக அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று பரோல் வழங்குவது மாநில அரசின் உரிமை, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வழியில் செயல்படும் இந்த அரசு பேரறிவாளனுக்கு பரோல் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.
இது தொடர்பாக அதிமுக ஆதரவு எம்எல்ஏக்களான கருணாஸ், தனியரசு, தமீமுன் அன்சாரி ஆகியோரையும் அவர் சந்தித்தார். இதனையடுத்து எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலினை சந்தித்த அதிமுக ஆதரவு எம்எல்ஏக்கள் பேரறிவாளன் பரோல் தொடர்பாக சட்டசபையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்து அதற்கு ஆதரவு அளிக்குமாறு கோரிக்கை விடுத்தனர்.
இந்த நிலையில் இன்று கருணாஸ் உள்ளிட்ட மூவரும் ஸ்டாலினை இன்று சந்தித்தனர். பேரறிவாளன் விடுதலை தொடர்பான பிரச்சினையை, சட்டசபையில் ஸ்டாலின் கிளப்பியதற்கு நன்றி தெரிவிக்க வந்ததாக மூவரும் செய்தியாளர்களிடம் கூறினர். அதிமுக ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் தொடர்ந்து ஸ்டாலினை சந்தித்துவருவது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.