சசிகலாவிற்கு எதிர்ப்பு; ஜெ. நினைவிடத்தில் விஷம் அருந்திய அதிமுக தொண்டர்

சனி, 31 டிசம்பர் 2016 (14:15 IST)
அதிமுக பொதுச்செயலாளராக ஜெ.வின் தோழி வி.கே.சசிகலா பொறுப்பேற்றதை தாங்கிக் கொள்ள முடியாத ஒரு அதிமுக தொண்டர், ஜெ.வின் சாமாதிக்கு சென்று விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்ள முயன்ற விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியது.


 


ஜெ.வின் மறைவிற்கு பின் அதிமுகவின் பொதுச்செயலாளராக அவரது தோழி சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இன்று காலை அவர் அதிமுக தலைமை அலுவலகம் வந்து அங்கிருந்த கோப்புகளில் கையெழுத்து இட்டு தனது பதவியை ஏற்றுக் கொண்டார். மேலும், அதன் பின் அவர் கண்ணீர் மல்க உரையாற்றினார்.
 
இந்நிலையில், அதிமுக அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் அவரை ஏற்றுக் கொண்டாலும், அதிமுகவின் அடிமட்ட தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை எனத் தெரிகிறது.
 
தமிழகத்தின் பல்வேறு இடங்களில் அவரது உருவ பொம்மையை சில அதிமுகவினர் மற்றும் பொதுமக்கள் எரித்து வருகின்றனர். மேலும், ஜெ.வின் அண்ணன் மகள் தீபாவிற்கு ஆதரவாக குரலும் எழுப்பி வருகின்றனர்.
 
இந்நிலையில், சசிகலாவின் தலைமையில் அதிமுக இயங்க உள்ள தாங்கிக் கொள்ள முடியாத, திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த காரனோடையைச் சேர்ந்த ஒரு அதிமுக தொண்டர் இன்று காலை மெரினா கடற்கரையில் உள்ள ஜெ.வின் நினைவிடத்திற்கு வந்து, விஷம் அருந்தி தற்கொலை செய்து கொள்ள முயன்றார். இதனையடுத்து அங்கிருந்தவர்கள் அவரைக் காப்பாற்றி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த விவகாரத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

வெப்துனியாவைப் படிக்கவும்