மாநிலங்களவையில் கனிமொழியின் பேச்சுக்கு அதிமுக எம்.பி.க்கள் எதிர்ப்பு

புதன், 26 நவம்பர் 2014 (17:09 IST)
தர்மபுரி அரசு மருத்துவமனையில் பச்சிளங்குழந்தைகள் பலியான சம்பவம் தொடர்பாக மாநிலங்களவையில் திமுக எம்.பி. கனிமொழி பேசியதால் அதிமுகவினர் கடும் அமளியில் ஈடுபட்டனர்.
 
மாநிலங்களவையில் பேசிய திமுக உறுப்பினர் கனிமொழி தர்மபுரி அரசு மருத்துவமனையில் கடந்த 14 முதல் 22 ஆம் தேதி வரை 16 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்ததாக தெரிவித்தார்.
 
முதலமைச்சர் பன்னீர்செல்வம் ஊட்டச்சத்து குறைப்பாட்டினாலே குழந்தைகள் உயிரிழந்ததாக விளக்கம் அளித்ததை சுட்டிக் காட்டிய அவர், அப்படியென்றால் அரசு மகப்பேறு காலத்தில் வழங்கும் நிதியுதவி பெண்களுக்கு முறையாக சேரவில்லையா என கேள்வி எழுப்பினார்.
 
இதற்கு அதிமுக உறுப்பினர்கள் கடும் ஆட்சேபம் தெரிவித்தனர். அவைத் தலைவர் இருக்கை அருகே வந்து கூச்சல் எழுப்பினர். மாநிலங்களவை துணைத் தலைவர் பி.ஜெ.குரியன், அதிமுக உறுப்பினர்கள் அமைதி காக்கும்படி பல முறை வலியுறுத்தினார். ஆனாலும் அவர்கள் தொடர்ந்து கண்டனக் குரல் எழுப்பியதால் அவையில் சிறிது நேரம் கூச்சல் குழப்பம் நிலவியது.

வெப்துனியாவைப் படிக்கவும்