காலியாக இருக்கும் இரண்டு அமைச்சர் பதவிகள்: எடப்பாடியை மொய்க்கும் எம்.எல்.ஏக்கள்

ஞாயிறு, 11 ஆகஸ்ட் 2019 (17:35 IST)
தமிழக அமைச்சரவையில் காலியாக இருக்கும் இரண்டு அமைச்சர் பதவிகளுக்காக அதிமுகவினர் இடையே தள்ளு முள்ளு நடந்து வருவதாக கூறப்படுகிறது.

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அமைச்சரவையில் தகவல் தொழில்நுட்ப அமைச்சராக இருந்தவர் மணிகண்டன். திடீரென இவர் பதவி நீக்கம் செய்யப்பட்டார். அவருடைய தகவல் தொழில்நுட்ப துறை பொறுப்பு அமைச்சர் உதயகுமாரிடம் ஒப்படைக்கப்பட்டது. உதயக்குமார் ஏற்கனவே வருவாய் துறை பொறுப்புகளை கவனித்து வருகிறார்.

அதேபோல இளைஞர்நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சராக இருந்த பாலகிருஷ்ணா ரெட்டி சிறைக்கு சென்றுவிட்டதால் அவரது துறையை கல்வி அமைச்சர் செங்கோட்டையனிடம் ஒப்படைத்தனர்.

தற்போது ஒரு அமைச்சர் இரு துறைகளை நிர்வகிப்பதில் பல சிக்கல்கள் இருப்பதால் இரண்டு துறைகளுக்கும் புதிய அமைச்சர்களை நியமிக்கலாம் என அதிமுக மேலிடம் யோசித்து வருவதாக கூறப்படுகிறது.

இதற்காக பல முக்கிய அதிமுக நிர்வாகிகள் போட்டியில் குதித்திருப்பதால் மீண்டும் கட்சிக்குள் பிரச்சினை ஏற்பட்டுவிடுமோ என்று முக்கிய தலைவர்கள் கவலையில் உள்ளனராம். ஒருபக்கம் துணை முதல்வரிடம் பலர் அந்த அமைச்சர் பதவிக்காக நச்சரித்து வர, மற்றொரு பக்கம் பன்னீர் செல்வத்தை பகைத்து கொள்ளாமல் தன்னிடம் சிபாரிசுக்கு வருபவர்களுக்கு எப்படி அமைச்சர் பதவி கொடுப்பது என்று குழப்பத்தில் முதல்வர் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஆட்சி முடிவடைய இன்னும் முழுதாக 2 வருடங்கள் கூட இல்லாத நிலையில் புதிய அமைச்சர்களை நியமித்து உட்கட்சி பூசல்களை ஏற்படுத்தி கொள்வது சட்டமன்ற தேர்தலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் கட்சி தலைமையிடம் அமைதி காப்பதாக அரசியல் வட்டாரங்கள் பேசிக் கொள்கின்றன.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்