பிரபல நாளிதழ்கள் மீது அதிமுக அமைச்சர் வழக்கு

வியாழன், 11 பிப்ரவரி 2016 (23:31 IST)
பிரபல நாளிதழ்களான தினமலர் மற்றும் தினகரன் ஆகியவை மீது அதிமுக அமைச்சர் உதயகுமார் வழக்கு தொடர்ந்துள்ளார்.
 

 
இது குறித்து, சென்னை முதன்மை செசன்ஸ் நீதிமன்றத்தில் வருவாய்துறை அமைச்சர் உதயகுமார் சார்பில், மாநகர அரசு வக்கீல் எம்.எல். ஜெகன் மனு தாக்கல் செய்துள்ளார்.
 
அதில், கடந்த பிப்ரவரி மாதம் 3 ஆம் தேதி அன்று, வெள்ளத்தில் சென்னை மூழ்கியதற்கு தமிழக அரசே காரணம் என்று மத்திய நிபுணர் குழு அறிக்கையில் தகவல் என தினகரன் நாளிதழ் செய்தி உள்நோக்கத்துடன், அவதூறாக வெளியிட்டுள்ளது.
 
அதே போல, அன்றைய தினம் வெளியான தினமலர் நாளிதழிலும் இதே கருத்தை கூறியுள்ளனர்.  இந்த செய்திகள், தமிழக அரசின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் விதத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
 
எனவே, அவதூறு செய்தி வெளியிட்ட தினகரன் பத்திரிகை ஆசிரியர் ஆர்.எம்.ஆர். ரமேஷ் மற்றும் தினமலர் பத்திரிகை ஆசிரியர் ஆர். கிருஷ்ண மூர்த்தி, பதிப்பாளர் ஆர். லட்சுமிபதி மீது அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
 
இந்த மனு, சென்னை முதன்மை செசன்ஸ் நீதிமன்ற நீதிபதி என். ஆதிநாதன் முன்பு விசாரணைக்கு வர உள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்