அதிமுகவிலிருந்து நீக்கப்படுகிறார் ஓபிஎஸ்? – எடப்பாடியாரின் மாஸ்டர் ப்ளான்?

திங்கள், 11 ஜூலை 2022 (11:28 IST)
இன்று அதிமுக அலுவலக கதவை இடித்து ஓபிஎஸ் உள்ளே புகுந்த நிலையில் அவரை கட்சியை விட்டு நீக்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதிமுக பொதுக்குழு கூட்டத்தை நடத்த சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்த நிலையில் சென்னை வானகரத்தில் அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடங்கி பரபரப்பாக நடந்து வருகிறது. கட்சியின் இடைக்கால பொதுசெயலாளராக எடப்பாடி பழனிசாமியை பொதுக்குழு தேர்ந்தெடுத்தது. அதை தொடர்ந்து மற்ற பொறுப்புகளுக்கு உறுப்பினர்கள் தேர்வு நடந்து வருகிறது.

இதற்கிடையே சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்திற்கு ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் சென்றுள்ளார். அங்கிருந்த ஈபிஎஸ் ஆதரவாளர்களுக்கும், ஓபிஎஸ் ஆதரவாளர்களுக்கும் மோதல் எழுந்தது. அதிமுக அலுவலகத்தின் கதவின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற ஓபிஎஸ் மற்றும் ஆதரவாளர்களால் அப்பகுதியில் பரபரப்பு எழுந்துள்ளது.

இந்நிலையில் நடந்து வரும் பொதுக்குழு கூட்டத்தில் கட்சிக்கு எதிராக செயல்பட்ட ஓபிஎஸ்ஸை கட்சியை விட்டு நீக்க வேண்டும் என பொதுக்குழு உறுப்பினர்கள் தொடர் முழக்கமிட தொடங்கியுள்ளனர். அப்போது மேடையில் பேசிய கே.பி,முனுசாமி, கட்சிக்கு எதிராக நடந்து கொண்ட ஓ.பன்னீர்செல்வத்தை கட்சியை விட்டு நீக்க இந்த பொதுக்குழு கூட்டத்திலேயே தீர்மானம் நிறைவேற்றப்படும் என வெளிப்படையாக அறிவித்துள்ளார்.

அதை தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வத்தை கட்சியை விட்டு நீக்குவது குறித்து கே.பி.முனுசாமியுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் அதிமுக வட்டாரத்தில் பரபரப்பு எழுந்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்