ஜெயலலிதா தொகுதியில் போதை சாக்லேட் - விஜயகாந்த் அதிர்ச்சி

வியாழன், 7 ஜூலை 2016 (15:48 IST)
முதலமைச்சர் தொகுதியான R.K.நகர் மற்றும் பல பகுதிகளில் போதை சாக்லேட் விற்பனை செய்யப்பட்டதை அறிந்தபோது மிகுந்த வேதனையும், அதிர்ச்சியும் அடைந்தேன் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
 

 
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தமிழகத்தின் தலைநகர் சென்னையில் சில தினங்களுக்கு முன்பு உலக சாக்லேட் தினம் கொண்டாடிய நிலையில், முதலமைச்சர் தொகுதியான R.K.நகர் மற்றும் பல பகுதிகளில் போதை சாக்லேட் விற்பனை செய்யப்பட்டதை அறிந்தபோது மிகுந்த வேதனையும், அதிர்ச்சியும் அடைந்தேன்.
 
காரணம் வருங்கால தமிழகத்தை வளமான பாதையில் கொண்டு செல்ல வேண்டிய பள்ளி மாணவர்களை குறிவைத்து, பள்ளிகளுக்கு அருகில் உள்ள கடைகளில் பல நாட்களாக போதை சாக்லேட் விற்பனை செய்யப்பட்டு வந்ததையும், இதனால் பாதிக்கப்பட்ட ஒரு மாணவன் முற்றிலும் சுயநினைவை இழந்து மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு இருப்பதையும் கேள்விப்படும்போது, இதை சாதாரணமான நிகழ்வாக எடுத்துகொள்ளாமல் உடனடியாக அனைத்து இடங்களிலும் காவல் கண்காணிப்பை பலமடங்கு பலபடுத்தி இதுபோன்ற சட்டவிரோத செயல்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கிடவேண்டும் என்ற எண்ணம் ஏற்படுகிறது.
 
ஏற்கனவே மதுக்கடைகள் மூலம் தமிழகம் சீரழிந்துள்ள நிலையில் இதுபோன்ற விற்பனைகளை நிச்சயம் அனுமதிக்கமுடியாது” என கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்