திமுகவில் இருந்து ராதாரவி சஸ்பெண்ட்: நயன்தாரா குறித்து சர்ச்சை பேச்சால் வந்த வினை

திங்கள், 25 மார்ச் 2019 (06:44 IST)
நடிகை நயன்தாரா குறித்து நடிகர் ராதாரவி சமீபத்தில் நடந்த 'கொலையுதிர்க்காலம்' புரமோஷன் விழாவில் சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். அவரது அருவருப்பான பேச்சுக்கு ஒட்டுமொத்த திரையுலகினர்களும் கடும் கண்டனங்களை தெரிவித்தனர். அவர் மீது நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விக்னேஷ் சிவன், சின்மயி உள்பட பலர் வலியுறுத்தினர். இருப்பினும் எந்த சங்கமும் அவர் மீது நடவடிக்கை எடுக்க தயங்கின
 
இந்த நிலையில் நடிகர் ராதாரவி திமுகவில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்படுவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர் தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது: நடிகர் ராதாரவி கழக கட்டுப்பாட்டை மீறியும், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும், செயல்பட்டு வருவதால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் அவர் தற்காலிகமாக திமுகவில் இருந்து நீக்கி வைக்கப்படுகிறார் என்று கூறப்பட்டுள்ளது
 
நடிகர் ராதாரவி தன்னைப்பற்றி தரக்குறைவாக பேசியது குறித்து நயன்தாரா எந்தவித கருத்தையும் தெரிவிக்கவில்லை என்றாலும் இந்த பிரச்சனை சமூக வலைத்தளங்களிலும், திரையுலகிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஒட்டுமொத்த திரையுலகினர்களும் ரசிகர்களும் ராதாரவிக்கு கண்டனம் தெரிவித்ததால் திமுக, இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்