சுயமரியாதைத் திருமணங்கள் தொடர்ந்து நடைபெற வேண்டும்: திமுக தலைவர் கருணாநிதி

திங்கள், 8 ஜூன் 2015 (16:22 IST)
தமிழகத்தில் சுயமரியாதைத் திருமணங்கள் தொடர்ந்து நடைபெற வேண்டும் என திமுக தலைவர் கருணாநிதி தனது ஆசையை வெளிப்படுத்துள்ளார்.
 
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பேரனும், மு.க.தமிழரசு – மோகனாம்பாள் ஆகியோரின் மகனுமான நடிகர் அருள்நிதிக்கும், நீதிபதி என்.கண்ணதாசன் – எஸ்.கே.கீதா ஆகியோரின் மகள் கீர்த்தனாவுக்கும் இன்று காலை சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் திருமணம் நடைபெற்றது.
 

 
அப்போது, மணமக்களை திமுக தலைவர் கருணாநிதி வாழ்த்தி பேசியதாவது :-
 
எனக்கு முன்னால் பேசிய சில பேர் குறிப்பிட்டதைப் போல எனக்கும் உடல் நிலை சரியில்லை தான். உடல் நிலை சரியில்லாததற்குக் காரணம், எனக்கு வயது முதிர்ந்து விட்டது என்பது மாத்திரமல்ல; அலைச்சல் - ஓய்வில்லாத அலைச்சல் - ஓய்வில்லாத உழைப்பு - ஏராளமான பார்வையாளர்கள் - இவைகள் தான் இந்த உடல் நிலை சரியில்லாமல் போனதற்கான காரணம் என்பதை நான் தெரிவிக்க விரும்புகிறேன்.
 
நம்முடைய பேராசிரியர் அவர்கள் தன் உடல் நிலையையும் பொருள்படுத்தாமல், இந்த நிகழ்ச்சிக்கு வந்து - ஏற்கனவே ஒப்புக் கொண்டபடி தலைமையேற்று விழாவினை நடத்திக் கொடுத்திருக்கிறார். அவருக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
 
மணமக்களுக்கு அனைவரும் தங்களுடைய வாழ்த்துகளைத் தெரிவித்திருக்கிறார்கள். மணமக்களைப் போல, மற்றவர்களும் வாழ வேண்டும் என்ற விருப்பத்தைத்தெரிவிக்க - அதற்கான ஆலோசனைகளைக் கூற - வழிமுறைகளை விளக்கத்தான் அனைவரும் இங்கே வந்திருக்கிறீர்கள். எனவே அடுத்தடுத்து நமக்குள்ள பணிகள் ஏராளம் இருக்கின்றன.
 
இங்கே ஒரு சமுதாயம் எப்படி இன்றைக்கு தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்ட சமுதாயமாக - தாழ்த்தப்பட்டவர்கள் என்று கூறத் தக்க அளவுக்கு ஆகி விட்ட ஒரு சமுதாயமாக ஆனதோ அதை ஏற்க மறுத்து, இன்றைக்கு திராவிட நாட்டிலே, தமிழ்நாட்டிலே திராவிட இயக்கத்தினரை தலையெடுக்காமல் செய்வோம் என்றெல்லாம் சூளுரைத்தவர்களுக்கு சூடு போடுகின்ற வகையிலே நாம் நம்முடைய இயக்கத்தை வெற்றிகரமாக நடத்திக் கொண்டு வருகிறோம்.
 
பலரும் பல்வேறு கட்சிகளும், கொள்கை வீரர்களும் கூடியிருக்கின்ற இந்தமாமன்றத்தில் நாம் அவைகளைப் பற்றி யெல்லாம் விரிவாகப் பேச விரும்பவில்லை.
 
என்னுடைய உடல் நிலையும் அதற்கு இடம் கொடுக்காது. ஆகவே இவைகளையெல்லாம் நான் பேசியதாக உணர்ந்து - இதுவரையில் தமிழ்நாட்டில் நடைபெற்றிருக்கின்ற இத்தகைய மறுமலர்ச்சித் திருமணங்கள் -சுயமரியாதைத் திருமணங்கள் - தொடர்ந்து நடைபெற - அந்தத் திருமணங்களை ஏற்றுக் கொண்டவர்களின் குடும்பத்தை செழிப்புற செய்ய - இங்கே வந்து வீற்றிருக்கின்ற அனைவரும் பணியாற்ற வேண்டும், சூளுரைத்துக் கொண்டு புறப்பட வேண்டுமென்று உங்களையெல்லாம் கேட்டுக் கொண்டு, இந்த மணமக்கள் இன்று போல் என்றும் வாழ்க, வாழ்க என்று வாழ்த்தி என் உரையை நிறைவு செய்கிறேன் என தனது ஆசையை வெளிப்படுத்திப் பேசினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்