விவேகானந்தர் மண்டபத்தில் பிரதமர் மோடி தியானம் செய்ய உள்ள அறையில் 2-டன் ஏசி பொருத்தப்பட்டுள்ள நிலையில், கன்னியாகுமரி முழுவதும் போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
டெல்லியில் இருந்து விமானம் மூலமாக கேரள மாநிலம் திருவனந்தபுரம் வரும் பிரதமர் மோடி, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் நாளை மாலை 4.30 மணிக்கு கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகை வளாகத்தில் உள்ள ஹெலிபேட் தளத்திற்கு வருகிறார்.
பின்னர், கார் மூலம் அருகில் உள்ள பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக வளாகத்திற்கு செல்லும் பிரதமர் மோடி, அங்கிருந்து கடல் நடுவே உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்திற்கு தனி படகு மூலம் செல்கிறார்.
நாளை மாலை முதல் ஜூன் 1 ஆம் தேதி வரை தொடர்ந்து 3 நாட்களுக்கு விவேகானந்தர் மண்டபத்தில் தியானம் மேற்கொள்கிறார். பிரதமரின் வருகையை முன்னிட்டு, கன்னியாகுமரியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகையில் உள்ள ஹெலிகாப்டர் இறங்கு தளத்திற்கு, இந்திய விமான படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர், திருவனந்தபுரத்தில் இருந்து வந்து பாதுகாப்பு ஒத்திகை செய்தது. மேலும், காவல்துறை உயரதிகாரிகளின் ஆலோசனை கூட்டமும் நடைபெற்றது.
டெல்லியில் இருந்து பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு அதிகாரிகள் கன்னியாகுமரிக்கு வந்து இங்கு செய்யப்பட்டு உள்ள பாதுகாப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்தனர். கன்னியாகுமரி படகு தளம், பிரதமர் பயணிக்கும் படகு உள்ளிட்டவர்களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
மேலும், கன்னியாகுமரி முழுவதும் போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.நாளை முதல் ஜூன் 1 ஆம் தேதி வரை மூன்று நாட்களும் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
நடுக்கடலில் பிரதமர் மோடி தியானம் செய்ய விவேகானந்தர் நினைவு மண்டப தியான அறையில் சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன. அங்கு குளிர் சாதன வசதி உள்ளிட்ட பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்படுகிறது. சுமார் 2 டன் ஏ.சி. கொண்டு வரப்பட்டு தியான மண்டபத்தில் பொருத்தப்பட்டது.