அப்துல்கலாம் மறைவு: அஞ்சலி செலுத்துவதில் தமிழக அரசுக்கு ஏன் இந்த அலட்சியம் ?: ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கண்டனம்

செவ்வாய், 28 ஜூலை 2015 (23:22 IST)
முன்னாள் குடியரசு தலைவர், அப்துல் கலாம் மறைவுக்கு அஞ்சலி செலுத்துவதில்கூட தமிழக அரசு அலட்சியமாக நடந்து கொள்வதாக  தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் குற்றம் சாட்டியுள்ளார்.


 

இது குறித்து, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
 
'பாரத ரத்னா" விருது பெற்ற முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம், மேகாலயா மாநிலத்தில் உள்ள இந்திய மேலாண்மை கல்வி நிறுவனத்தில் உரையாற்றிக் கொண்டிருந்தபோதே திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி கீழே விழுந்து காலமான செய்தி கேட்டு நாடே துக்கத்தில் ஆழ்ந்துள்ளது.
 
நாடு முழுவதும் 7 நாள்கள் அரசு முறை துக்கம் அனுசரிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. மத்திய அரசு சம்மந்தப்பட்ட எந்த நிகழ்ச்சிகளும் மேற்கண்ட 7 நாள்களில் நடைபெறாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
ஆனால், தமிழக அரசு சார்பாக மறைந்த அப்துல் கலாம் அவர்களுக்கு துக்கம் அனுசரிப்பது குறித்து எந்த அறிவிப்பும் வெளிவராதது எல்லோரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
 
இன்று காலை பத்திரிகையாளர்களை சந்தித்த தலைமை செயலாளர் ஞானதேசிகன் வழக்கம் போல் தமிழகத்தில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள் இயங்கும் என்று கூறியிருக்கிறார்.
 
தமிழகத்திலே பிறந்து, அணு விஞ்ஞானியாக வளர்ந்து குடியரசுத் தலைவராக பதிவான வாக்குகளில் 90 சதவீத வாக்குகளைப் பெற்று மக்கள் குடியரசுத் தலைவர் என்று நற்பெயர் பெற்றவரின் மறைவுக்கு அஞ்சலி செலுத்துவதில் தமிழக அரசுக்கு ஏன் இந்த அலட்சியம் ?
 
துக்கம் அனுசரிக்கும் வகையில் எந்த மாணவர்களை, இளைஞர்களை நேசித்தாரோ அவர்கள் படிக்கிற பள்ளிகளுக்கு, கல்லூரிகளுக்கு விடுமுறை விடுவதில் என்ன தயக்கம் ?
 
நமது அண்டை மாநிலமான புதுச்சேரியில் அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கும் போது தமிழக அரசு மட்டும் பாராமுகமாக இருப்பது ஏன் ? நாட்டு மக்களாலும், அனைத்து அரசியல் கட்சிகளாலும் ஒட்டுமொத்தமாக போற்றி பாராட்டப் பெற்ற மாசுமருவற்ற டாக்டர் அப்துல் கலாமின் மறைவுக்கு அவர் பிறந்து, வளர்ந்த சொந்த மாநிலத்திலேயே - தமிழ் மண்ணிலேயே துக்கம் அனுசரிக்க முதலமைச்சர் ஜெயலலிதாவின் தலைமையிலான தமிழக அரசு மறுக்கலாமா ? மறுப்பது நியாயமா ?
 
மறைவு செய்தி கேட்டவுடனேயே துக்கத்தை அனுசரிக்கிற வகையில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடாமல் வேறொரு நாளில் விடுமுறை விடுவது எந்த வகையிலும் அவருக்கு பெருமை சேர்க்காது.
 
இந்தியாவின் தென்கோடியில் சாதாரண சிறுபான்மை சமுதாயத்தை சேர்ந்த படகோட்டியின் மகனாக பிறந்து, நமது நாட்டின் மிக உயர்ந்த குடியரசுத் தலைவராக பொறுப்பு வகித்து திடீரென மறைந்த டாக்டர் அப்துல் கலாமின் இறுதிச்சடங்கு அவர் பிறந்து வளர்ந்த இராமேஸ்வரத்தில் நடத்த வேண்டுமென அவரது குடும்பத்தினர் மற்றும் பலர் விரும்பி கோரிக்கை விடுத்துள்ளனர். அவர்களது கோரிக்கையில் நியாயம் இருப்பதாகவே கருதுகிறேன்.
 
அவரது குடும்பத்தினரின் கோரிக்கையில் உள்ள நியாயத்தை ஏற்று இறுதிச் சடங்குகள் இராமேஸ்வரத்தில் நடக்க தமிழக அரசு உடனடியாக முன்வந்திருக்க வேண்டும். இதற்காக இதுவரை மத்திய அரசை தமிழக அரசு சார்பில் வலியுறுத்தியதாக தெரியவில்லை. மறைந்த அப்துல்கலாமின் புகழுக்கு பெருமை சேர்ப்பதற்கு மாறாக தமிழக அரசின் இந்த போக்கை மிகமிக வன்மையாக கண்டிக்கிறேன்.
 
டாக்டர் அப்துல்கலாமின் மறைவையொட்டி தமிழக அரசு ஏனோதானோ என்று அலட்சியமாக இருப்பது தமிழகத்தில் ஒரு ஆட்சி நடைபெறுகிறாதா என்கிற கேள்வியே மேலோங்கி எழுகிறது.
 
எனவே, மறைந்த அப்துல்கலாமின் பெரும் புகழுக்கு பெருமை சேர்க்கும் வகையில் தமிழக அரசு 7 நாள் துக்கம் அனுசரிப்பதோடு, அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு உடனே விடுமுறை அறிவிக்க வேண்டும்.
 
மேலும், அவரது இறுதிச் சடங்கு அவர் பிறந்து, வளர்ந்த இராமேஸ்வரத்தில் நடத்துவதற்கு உரிய நடவடிக்கைகளை தமிழக அரசு உடனே எடுக்க வேண்டும்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்