ஈரோடு பேருந்து நிலையத்தில் அரசுப் பேருந்து ஒன்று பயணிகளை இறக்கிக் கொண்டிருந்தது. அப்போது சென்னிமலையில் இருந்து ஈரோட்டிற்கு வந்த மற்றொரு அரசு பேருந்து அந்த பேருந்து பின்னால் வந்து நின்றது. இதனால் அந்த பேருந்தின் டிரைவர் முன்னாள் நின்ற பேருந்தின் டிரைவரை எச்சரிப்பதற்காக ஹாரனை அழுத்தி கொண்டே இருந்தார்.
ஆனால் பயணிகள் தொடர்ந்து இறங்கி கொண்டு இருந்ததால் முன்னாள் உள்ள பேருந்து நின்று கொண்டே இருந்தது. இதில் ஆத்திரம் அடைந்த சென்னிமைலை பேருந்தின் டிரைவர் கீழே இறங்கி வந்து முன்னாள் பேருந்தில் இருந்து இறங்கிக் கொண்டிருந்த ஒரு கர்ப்பிணிப் பெண்ணை காலால் உதைத்துள்ளார். பின் அங்கிருந்து அந்த டிரைவர் தப்பியோடிவிட்டார்
இதனால் கடும் கோபமடைந்த அந்த கர்ப்பிணிப் பெண்ணின் உறவினர்களும், சக பயணிகளும் பேருந்து நிலையத்திலே போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதுகுறித்து புகார் அளித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸார் கூறினார்கள். இதனால் போராட்டம் கைவிடப்பட்டது.