சொத்து தகராறில் தந்தையை கத்தியால் குத்தி கொலை செய்த கல்லூரி மாணவர் கைது

செவ்வாய், 8 ஜனவரி 2019 (13:23 IST)
வேலூர் மாவட்டம் காட்பாடியில் சொத்து தகராறில் தந்தையை கத்தியால் குத்தி கொலை செய்த கல்லூரி மாணவரை போலீசார் கைது செய்தனர். 


 
வேலூரை அடுத்த காட்பாடி சேனூரை சேர்ந்தவர் கண்ணன் (வயது 57). இவர் அப்பகுதியில் இறைச்சி வியாபாரம் செய்து வருகிறார். இவருடைய மனைவி நிர்மலா. இவர்களுக்கு சுரேஷ் மற்றும் 17 வயதில் ஒரு மகன் உள்ளனர். சுரேசுக்கு திருமணமாகி மனைவியுடன் தனியாக வசித்து வருகிறார். 2-வது மகன் வேலூரில் உள்ள தனியார் கலைக்கல்லூரியில் இளங்கலை பொருளாதாரம் முதலாமாண்டு படித்து வருகிறார்.
 
இந்த நிலையில் கண்ணணின் மனைவி நிர்மலா கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இதனிடையே  கண்ணுக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால்  தனது 2-வது மகனின் படிப்பு செலவுக்கு பணம் கொடுக்காமல் கண்ணன் உல்லாசமாக வாழ்ந்து வந்தாராம். 
 
இதனை அறிந்த மகன்கள் இருவரும் தந்தையை கண்டித்துள்ளனர். மேலும் சொத்தை இருவரின் பெயருக்கும் மாற்றி தருமாறு கேட்டுள்ளனர். ஆனால் கண்ணன் சொத்தில் இருவருக்கும் எந்த பங்கும் தர முடியாது என கூறி உள்ளார். அதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. சிறிது நேரத்தில் மகன்கள் இருவரும் அங்கிருந்து சென்று விட்டனர்.
 
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கண்ணன் வீட்டிற்கு வந்து, தனது அறையில் தங்கினார். அப்போது அங்கு வந்த 2-வது மகன், எனக்கும் படிப்பு செலவுக்கு பணம் தரவில்லை. எனவே சொத்தை வேறு யாருக்கும் எழுதி கொடுக்க கூடாது என்று கூறினார். அப்போது தந்தை, மகனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த மகன், வீட்டு சமையல் அறையில் இருந்த கத்தியால் கண்ணனை குத்தினார். இதில் கண்ணன் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
 
இதையடுத்து அங்கிருந்து தப்பிய கல்லூரி மாணவர் வஞ்சூர் கிராம நிர்வாக அலுவலர் ஷீலாவிடம் சரண் அடைந்தார். அவரை விருதம்பட்டு போலீசாரிடம் கிராம நிர்வாக அலுவலர் ஒப்படைத்தனர். அதை தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்