9ஆம் வகுப்பு மாணவன் தயாரித்துள்ள மொபைல் மூலம் தீயணைக்கும் கருவி

வியாழன், 22 ஜனவரி 2015 (19:32 IST)
தீ விபத்து ஏற்பட்டால் மொபைல் போன் மூலம் தகவல் அளிப்பதுடன், தானாக தண்ணீர் ஊற்றி அணைக்கும் கருவியினை 9ஆம் வகுப்பு மாணவன் தயாரித்துள்ளான்.
 
தேனி மாவட்டம் கூடலூரில் உள்ள தனியார் பள்ளி ஒன்றைச் சேர்ந்த 9ஆம் வகுப்பு மாணவர் ஜெகதீஸ் இந்தக் கருவியைத் தயாரித்துள்ளான்.
 
இதுகுறித்து மாணவன் ஜெகதீஸ் கூறும்போது, 'எனது தந்தை பரமன் விவசாய வேலை பார்த்து வருகிறார். சிறுவயதில் இருந்தே ஏதேனும் கண்டுபிடிக்க வேண்டும் என்ற ஆர்வம் எனக்கு இருந்தது. அதன்படி தீ விபத்தை தடுப்பதற்கான சாதனம் கண்டுபிடிக்க முயற்சி செய்தேன்.
 
இந்த கருவி ஒரு இடத்தில் தீ விபத்து நடந்தவுடன் மொபைல் போன் மூலம் அதன் உரிமையாளர்களுக்கும், தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் தெரிவிக்கும். அவர்கள் வருவதற்குள் அங்குள்ள தண்ணீர் தொட்டியில் இணைக்கப்பட்டிருக்கும் குழாய் மூலம் தண்ணீரைத் தானாக தெளிக்கும். இதனால் சேதம் கட்டுப்படுத்தப்படும்' என்று தெரிவித்துள்ளார்.
 
மேலும், வீடுகளுக்கு இந்த சாதனத்தை பொருத்த ரூபாய் 2 ஆயிரம் வரையும், தொழிற்சாலைகளுக்குப் பொருத்த ரூபாய் 5 ஆயிரம் வரையும் செலவாகும் என்றும் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்