சொன்னது 10 சதவீதம் தான் இன்னும் 90 சதவீதம் உண்மைகள் இருக்கிறது: ஆர்ப்பரிக்கும் ஓபிஎஸ்!

புதன், 8 பிப்ரவரி 2017 (08:40 IST)
தமிழக முதல்வராக இருக்கும் ஓபிஎஸ் நேற்று இரவு சென்னை மெரினா கடற்கரையில் உள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சமாதிக்கு சென்று 40 நிமிடங்களுக்கும் மேல் மௌன அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்கள் மத்தியில் பேசினார்.


 
 
அப்போது தான் வற்புறுத்தப்பட்டு ராஜினாமா செய்ய வைக்கப்பட்டேன் என பல்வேறு குற்றச்சாட்டுகளை சசிகலா தரப்பின் மீது வைத்தார். தன்னை அமைச்சர்கள் அசிங்கப்படுத்தியது சசிகலா குடும்பத்தின் தலையீடு உட்பட பல விவகாரங்களை கூறி நட்டையே உலுக்கினார்.
 
ஒரு முதலமைச்சரே மிரட்டப்பட்டு ராஜினாமா செய்ய வைக்கப்பட்டுள்ளார் என அனைவரும் சசிகலா தரப்பின் மீது விமர்சனங்களை வைத்து வருகின்றனர். பின்னர் நேற்று இரவு ஓபிஎஸ் தனது இல்லத்துக்கு சென்றார். இங்கு வெளியே திரண்டிருந்த தொண்டர்களுக்கு நன்றி செலுத்திவிட்டு அனைவரும் போய் உணவு அருந்திவிட்டு தூங்க செல்லுங்கள் என கூறிவிட்டு சென்றுவிட்டார்.
 
இந்நிலையில் பிரபல தமிழ் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பிரத்யேக பேட்டி ஒன்றை தொலைபேசி வாயிலாக கொடுத்தார். அப்போது தான் நேற்று கூறியது வெறும் 10 சதவீதம் தான் ஆனால் இன்னும் சொல்ல வேண்டிய 90 சதவீதம் உண்மை மீதம் இருக்கிறது என கூறினார். இன்னும் பல விவகாரங்கள் ஓபிஎஸ் மூலம் வெளிவரும் என அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்