8 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்; திருப்பூரில் சாலை மறியல்

திங்கள், 22 ஏப்ரல் 2013 (13:58 IST)
திருப்பூரில் 8 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிறுமியின் குடும்பத்திற்கு தகுந்த நிவாரணம் வழங்கக் கோரி பொதுமக்கள் சிறுமியின் சொந்த ஊரில் சாலை மறியல் மற்றும் கடையடைப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் கோயம்பாளையத்தைச் சேர்ந்த இரண்டாம் வகுப்பு படிக்கும் 8 வயது மாணவி கடந்த 12ஆம் தேதி பக்கத்து வீட்டு இளைஞர் ஒருவரால் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளானார். இது தொடர்பாக கண்ணன் என்பவர் கைது செய்யப்பட்டார்.

பாதிக்கப்பட்ட சிறுமி கோவை சிஎம்ஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிறுமிக்கு அரசு செலவில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தினர். பொதுமக்களின் கோரிக்கையை அடுத்து திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கோவையில் தனியார் மருத்துவமனையில் சிறுமியை அனுமதிக்க ஏற்பாடு செய்து வந்தார்.

இந்நிலையில், இந்தச் சம்பவத்தைக் கண்டித்தும், அந்தச் சிறுமியின் குடும்பத்துக்கு தகுந்த நிவாரணம் வழ‌ங்கக் கோரியும் கோயம்பாளையம் மக்கள் அந்தப் பகுதியில் கடையடைப்புப் போராட்டம் நடத்தினர். மேலும் சாலை மறியலிலும் ஈடுபட்டனர். சாலை மறியலில் ஈடுபட்ட பெண்களை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக வாகனத்தில் ஏற்றி அப்புறப்படுத்தினர். அப்போது காவல் துறையினருக்கும் மக்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

வெப்துனியாவைப் படிக்கவும்