746 மெட்ரிக் பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து: தமிழக அரசு

செவ்வாய், 8 மார்ச் 2016 (14:58 IST)
அரசு நிர்ணயித்த அடிப்படை வசதிகள் இல்லாத 746 மெட்ரிக் பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட தற்காலிக அங்கீகாரம் நீட்டிக்கப்படமாட்டது என தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தது. இதனால் 746 மெட்ரிக் பள்ளிகள் மே 31 முதல் மூடப்படும் நிலை உள்ளது.


 
 
குறைந்தபட்ச நில அளவு, கட்டமைப்பு வசதிகள் உட்பட அரசு நிர்ணயித்த விதிமுறைகளை பின்பற்றாத 746 மெட்ரிக் பள்ளிகளுக்கு மே 31 ஆம் தேதி வரை தற்காலிக அங்கீகாரம் அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.
 
இந்த அரசாணையை ரத்து செய்து அந்த பள்ளிகளை மூடி அதில் படிக்கும் மாணவர்களை அருகாமையில் உள்ள அங்கீகாரம் உள்ள பள்ளிக்கு மாற்ற வேண்டும் என சமூக ஆர்வலர் நாராயணன் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
 
நேற்று விசாரணைக்கு வந்த இந்த மனுவின் விசாரணையின் போது பள்ளிக் கல்வித் துறை சார்பில் அந்த பள்ளிகளில் படிக்கும் 5.12 லட்சம் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டே தற்காலிக அங்கீகாரம் வழங்கப்பட்டதாக கூறப்பட்டது.
 
இந்த அனுமதி மே 31 ஆம் தேதியுடன் முடிவடைவதால், இந்த தற்காலிக அங்கீகாரம் மேலும் நீடிக்கப்படமாட்டாது என பள்ளிக் கல்வித் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் இந்த வழக்கை முடித்து வைத்தனர். இதன் மூலம் 746 மெட்ரிக் பள்ளிகளின் அங்கீகாரம் ரத்தாகிறது. இதனால் 5.12 லட்சம் மாணவர்களின் கல்வி பாதிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்