நாகர்கோவிலில் செய்தியாளர்களை சந்தித்த பொன்.ராதாகிருஷ்ணன் பேசுகையில், "60 ஆண்டு கனவாக இருந்த குளச்சல் வர்த்தக துறைமுகத்தை கொண்டுவர வேண்டும் என்று நாம் விரும்புகிறோம். பிரதமர் நரேந்திரமோடி 21 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் இந்த திட்டத்தை நமக்கு தருவதற்கு தயாராக இருக்கிறார்.
தேவையில்லாமல் மீனவர்களை அச்சுறுத்தி, ஊரெல்லாம் அழிந்துவிடும் என்று பயமுறுத்தியதால் அவர்கள் துறைமுகத்துக்கு எதிரான போராட்டத்துக்கு ஆதரவாக இருக்கிறார்கள். மீனவர்கள் உங்கள் வருங்கால தலைமுறைக்கு கிடைக்கக்கூடிய வாழ்க்கையை இழக்கும்வகையில் செயல்படாதீர்கள்.
குளச்சல் வர்த்தக துறைமுகத்தை கொண்டு வருவதற்காக, தேவை ஏற்பட்டால் எனது கட்சி தலைவர்கள் ஒப்புதலோடும், பிரதமர் மோடியின் ஆசியோடும் எனது மந்திரி பதவியைக்கூட ராஜினாமா செய்துவிட்டு, களத்தில் இறங்கி இந்த துறைமுகம் கொண்டுவர நான் போராடுவேன். இந்த திட்டத்துக்கு மாநில அரசின் ஆதரவு நிச்சயமாக கிடைக்கும். ஏற்கனவே அவர்கள் ஆதரவு கொடுத்திருக்கிறார்கள்.
இன்றைய காலகட்டத்தில் மின்சாரம் தயாரிப்பதற்கு இருக்கக்கூடிய மிக வசதியான முறை அணுமின் நிலையங்கள் தான். இதில் இருக்கக்கூடிய சாதக, பாதகங்களை அரசாங்கம் அறியாமல் இல்லை. எனவே இதைப்பற்றி அச்சப்படுவதற்கு எந்த தேவையும் கிடையாது என்றார்.