தர்மபுரி அரசு மருத்துவமனையில் 5 குழந்தைகள் ‘திடீர்’ சாவு

ஞாயிறு, 16 நவம்பர் 2014 (12:43 IST)
தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 5 குழந்தைகள் திடீரென இறந்தன. சரியான பராமரிப்பு இல்லாததால் இறந்ததா? என மருத்துவ அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
 
தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இருந்து நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். இங்கு மாதந்தோறும் சுமார் 500 பிரசவங்கள் நடக்கிறது. இதற்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு நன்னடத்தை சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
 
இந்தநிலையில் நேற்றுமுன்தினம் மாலை 4 மணி முதல் இரவு 12 மணிக்குள் அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகள் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த, பிறந்து சில நாட்களே ஆன 5 குழந்தைகள் அடுத்தடுத்து இறந்தன. முறையான சிகிச்சை மற்றும் பராமரிப்பு இல்லாத காரணத்தால் 5 குழந்தைகளும் இறந்ததாக தகவல் பரவியது.
 
இதனை அறிந்த பொதுமக்கள் மருத்துவமனை வளாகத்தில் கூடியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அவர்கள், அரசு மருத்துவமனை நிர்வாகத்தின் மீதும், டாக்டர்கள் மீதும் குற்றம்சாட்டினர். டாக்டர்கள் முறையாக மருத்துவமனைக்கு வந்து நோயாளிகளையும், குழந்தைகளையும் கவனிப்பதில்லை என்றும் கூறினார்கள்.
 
இதுகுறித்து தகவல் அறிந்த மருத்துவத்துறை அதிகாரிகள், மருத்துவக்கல்லூரி முதல்வர் (பொறுப்பு) இளங்கோவன், உள்ளிருப்பு மருத்துவ அலுவலர் சுரபி ஆகியோர் குழந்தைகளின் பெற்றோர் மற்றும் அந்த பிரிவின் டாக்டர், செவிலியர்களிடம் விசாரணை நடத்தினர். மேலும், இறந்த குழந்தைகளின் மருத்துவ அறிக்கையையும் டாக்டர் குழுவினர் ஆய்வு செய்தனர்.
 
பின்னர் மருத்துவ அதிகாரிகள் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
 
பிறக்கும் குழந்தைகள் 2½ முதல் 3 கிலோ வரை எடை இருக்க வேண்டும். ஆனால் சில குழந்தைகள் எடை குறைவாகவும், உடல்நலக்குறைவு, மஞ்சள் காமாலை, கிருமி தொற்று, குறை பிரசவம், மூச்சுத் திணறல் போன்ற குறைபாடுகளால் பிறக்கும் போதே பாதிக்கப்படுகின்றன. இவ்வாறு பிறந்த 90 குழந்தைகள் மருத்துவமனையில் சிறப்பு பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
 
இதேபோன்று நேற்று முன்தினம் சிறப்பு பிரிவில் சிகிச்சை பெற்று வந்த ஒரு ஆண் குழந்தை 1¼ கிலோவும், 2 பெண் குழந்தைகள் முறையே 1.3, 1.1 கிலோவுடன் குறை பிரசவத்தில் பிறந்துள்ளன. மேலும், 2 பெண் குழந்தைகளுக்கு பிறக்கும் போதே மூச்சுத்திணறல் இருந்தது.
 
எடை குறைவு மற்றும் மூச்சுத்திணறல் உள்ள இந்த 5 குழந்தைகளுக்கும் சிறப்பு பிரிவில் 24 மணி நேரமும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் பச்சிளம் குழந்தைகள் இறந்துள்ளன. இதற்கு டாக்டர், செவிலியர்களின் கவனக்குறைவு காரணம் கிடையாது என்று அவர்கள் தெரிவித்தனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்