ஜெயலலிதா இல்லாத மேடையில் 45 பேர்: வரலாற்றில் முதன் முறையாக!

வியாழன், 29 டிசம்பர் 2016 (12:52 IST)
தமிழக முதல்வராகவும் அதிமுக பொதுச்செயலாளருமாக இருந்த ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் முதன் முறையாக அதிமுக பொதுக்குழு இன்று சென்னை வானகரத்தில் கூடியது.


 
 
கட்சியின் தலைமை பதவியான பொதுச்செயலாளர் பதவியை வகிக்கப்போவது யார் என்பதை தீர்மானிக்கும் பொதுக்குழு கூட்டம் என்பதால் இது வரலாற்றில் இடம்பெற்றுள்ளது. அரசியல் வட்டாரத்திலும் சரி தமிழக மக்கள் மத்தியிலும் இந்த பொதுக்குழு கூட்டம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.
 
ஜெயலலிதாவின் மறைவையடுத்து அவரது இடத்தை யார் பிடிப்பார் என்பதால் தான் இது இவ்வளவு முக்கியத்துவம் பெற்றது. அனைவரும் எதிர்பார்த்தது போலவே ஜெயலலிதாவின் தோழி சசிகலா பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்படுகிறார் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
 
முன்னதாக ஜெயலலிதா வழக்கமாக அமரும் நாற்காலி பொதுக்குழு மேடைக்கு கொண்டு வரப்பட்டது. மேடையின் மையத்தில் அந்த நாற்காலி போடப்பட்டு அதில் ஜெயலலிதாவின் படம் வைக்கப்பட்டது. ஜெயலலிதாவின் நாற்காலியின் இரு புறமும் சேர்த்து மேடையில் மொத்தம் 45 பேர் அமர்ந்திருந்தனர்.
 
ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி, தம்பிதுரை, பொன்னையன், மதுசூதனன், வளர்மதி, வைகைச்செல்வன், செங்கோட்டையன், பன்ருட்டி ராமச்சந்திரன் உள்ளிட்ட 45 அதிமுகவினர் அமர்ந்திருந்தனர். அதி்முக பொதுக்குழு வரலாற்றில் 45 பேர் மேடையில் அமர்ந்த முதல் பொதுக்குழு இது தான்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்