சிறார் சீர்திருத்த பள்ளியிலிருந்து தப்பிக்க லஞ்சம் : 4 பேர் கைது

புதன், 3 ஆகஸ்ட் 2016 (04:23 IST)
புதுச்சேரி அரியாங்குப்பத்தில் உள்ள சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில், சிறார்களை ரூ. 10 ஆயிரம் வாங்கிக்கொண்டு தப்பிக்கவிட்டதாக பாதுகாவலர் உள்ளிட்ட 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
 

 
புதுச்சேரியை அடுத்த அரியாங்குப்பம் பகுதியில் சிறுவர் சீர்திருத்தப் பள்ளிஉள்ளது. இங்கு 50க்கும் மேற்பட்ட இளம் சிறார்கள் உள்ளனர். இங்கிருந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு சரத்ராஜ் தப்பித்துள்ளார். அவரை கண்டுபிடித்த அரியாங்குப்பம் காவல் துறையினர் மீண்டும் சீர்திருத்தப் பள்ளியில் அடைத்தனர்.
 
இந்நிலையில் மீண்டும் சரத்ராஜ் தப்பித்துள்ளார். இதைத் தொடர்ந்து அவரை காவல் துறையினர் தேடி வந்த நிலையில், லாஸ்பேட்டை பகுதியில் மோட்டார் பைக், லேப்-டாப் ஆகியவற்றை திருடிய வழக்கில் சரத்ராஜை லாஸ்பேட்டை காவல் துறையினர் கைது செய்தனர்.
 
இதுகுறித்து தகவல் அறிந்த அரியாங்குப்பம் காவல் துறையினர் லாஸ்பேட்டை வந்து, சரத்ராஜிடம் விசாரித்த போது ரூ. 10 ஆயிரம் வாங்கிக் கொண்டு பாதுகாவலர் ராஜவேலு தப்பிக்கவிட்டதாகவும், அவருக்கு பணம் கொடுப்பதற்காக திருட்டு வேலையில் ஈடுபட்டதாகவும் கூறியுள்ளார்.
 
இதையடுத்து சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் இருந்து தப்பவிட்ட பாதுகாவலர் ராஜவேலு மற்றும் அவருக்கு அலுவலர், சமையல்காரர், காவலாளி ஆகியோரை காவல் துறையினர் கைது செய்தனர். பின்னர் அவர்களை நீதிபதியிடம் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்