3 பாமகவினர் குண்டர் சட்டத்தில் கைது

திங்கள், 3 ஜூன் 2013 (14:04 IST)
FILE
லாரி ஓட்டுநர் கொலை வழக்கில் விழுப்புரம் பகுதியில் பாமகவைச் சேர்ந்த 3 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மாமல்லபுரத்தில் பாமக மற்றும் வன்னியர் சங்கத்தின் சித்திரை விழாவில் பங்கேற்க வந்த பாமகவினர் மரக்காணம் பகுதியில் தலித் மக்கள் மீது தாக்குதல் நடத்தினர். மேலும் விதிகளை மீறி கூட்டம் நடத்தப்பட்டதால், பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அக்கட்சியைச் சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டதன் எதிரொலியாக தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் பாமக மற்றும் வன்னியர் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் வன்முறைகளில் ஈடுபட்டு வந்தனர். அவர்களின் வன்முறையால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

பாமகவினரின் வன்முறையின் போது, ஒரு லாரியின் மீது கல் வீசி தாக்கியதில் லாரி ஓட்டுநர் பலியான சம்பவத்தில், விழுப்புரத்தை அடுத்து சிறுவாடியைச் சேர்ந்த தேவராஜ், ஜானகிராமன் உட்பட 3 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் ஏற்கனவே பலர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இவர்கள் மூவரும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்