சுட்டுக் கொல்லப்பட்ட தமிழர்களின் பிரேத பரிசோதனை அறிக்கை: நீதிமன்றத்தில் தாக்கல்

திங்கள், 20 ஏப்ரல் 2015 (15:32 IST)
ஆந்திர காவல்துறையினரால், திருப்பதி வனப்பகுதியில் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழகத் தொழிலாளர்கள் 20 பேரின் பிரேத பரிசோதனை அறிக்கை ஹைதராபாத் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.


 

 
ஆந்திர மாநிலம் திருப்பதி வனப்பகுதியில் 20 தமிழர்கள் ஆந்திர காவல்துறையினரால் கடந்த 7 ஆம் தேதி சுட்டுக் கொல்லப்பட்டனர்.  இவர்களில் 12 பேர் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். திருப்பதியில் நடந்த பிரேத பரிசோதனைக்கு பிறகு 12 பேரின் உடல்களும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
 
இதில் ஜவ்வாதுமலை பகுதியைச் சேர்ந்த 5 பேரின் உடல்கள் அடக்கம் செய்யப்பட்டு விட்டது. பழனி என்பவரது உடலை அவர்களது குடும்பத்தினர் தகனம் செய்தனர். இதற்கிடையே சசிகுமார் உள்பட 6 பேர் உடல்களை மறுபிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்று ஹைதராபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் இந்த கோரிக்கையை ஏற்று மறுபிரேத பரிசோதனை செய்ய உத்தரவிட்டது.
 
இந்த உத்தரவின்படி சசிகுமார், பெருமாள், முருகன், முனுசாமி, மகேந்திரன், மூர்த்தி ஆகிய 6 பேரின் உடல்கள் திருவண்ணாமலை மருத்துவமனையில் கடந்த 18 ஆம் தேதி மறுபிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இதற்கிடையே 20 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கு ஹைதராபாத் உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.
 
அப்போது சுட்டுக் கொல்லப்பட்ட 20 பேரின் முதல் பிரேத பரிசோதனை அறிக்கையை ஆந்திர காவல்துறையினர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். இந்த வழக்கு இம்மாதம் 22 ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.
 
22 ஆம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வரும்போது, 2 ஆவது பிரேத பரிசோதனை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று தலைமை நீதிபதி கல்யாண் ஜோதி, நீதிபதி சஞ்சய் குமார் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் உத்தரவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்