12 ஆம் வகுப்பு மாணவி வகுப்பறையில் தூக்கிட்டு தற்கொலை: சிதம்பரத்தில் பரபரப்பு

திங்கள், 21 மார்ச் 2016 (14:48 IST)
சிதம்பரத்திலுள்ள நந்தனார் அரசு பள்ளியின் வகுப்பறையில் பிளஸ் 2 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.


 

 
விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகா திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள மாமந்தூர் கிராமத்தை சேர்ந்தவர் எல்லப்பன். விவசாயியான இவருடைய மனைவி செல்வி.
 
இந்த தம்பதியினருக்கு 4 மகள்கள் உள்ளனர். இதில் அக்ஷயா, கடலூர் மாவட்டம் சிதம்பரம் நந்தனார் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்தார்
 
 அக்ஷயாவின் தங்கையான அகிலாவும் அதே பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவர்கள் இருவரும் அங்குள்ள விடுதியில் தங்கி படித்து வந்தனர்.
 
இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் நடந்த கணித தேர்வை எழுதினார். அந்த தேர்வு மிகவும் கடினமாக இருந்தது.
 
இதனால் அந்த தேர்வை எழுதிய அக்ஷயாவுக்கு தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண் வராது என நினைத்து, வருத்தத்துடன் இருந்ததாகக் கூறப்படுகின்றது.
 
 இது குறித்து தன்னுடன் பயிலும் சக மாணவிகளிடம் கூறியுள்ளார். கடந்த 2 நாட்களாக சரியாக சாப்பிடாமல் மனமுடைந்த நிலையில் இருந்ததாக கூறப்படுகின்றது.
 
இந்நிலையில் தேர்வுக்கு படிக்கப்போவதாக சக மாணவிகளிடம் கூறிய அக்ஷயா, விடுதிக்கு அருகில் பள்ளிக்கூட கட்டிடத்தின் 2 ஆவது மாடியில் உள்ள வகுப்பறைக்கு சென்றுள்ளார்.
 
அங்குள்ள மின்விசிறியில் துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதற்கிடையில் படிக்க சென்ற அக்ஷயா நீண்டநேரம் ஆகியும் விடுதிக்கு திரும்பாததால் சந்தேகமடைந்த சக மாணவிகள் அக்ஷயாவை தேடிச் சென்றுள்ளனர்.
 
அப்போது, மின்விசிறியில் அக்ஷயா தூக்கில் பிணமாகத் தொங்கிதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
 
இது குறித்த காவல்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அங்கு வந்த காவ்லதுறையினர், அக்ஷயாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
 
இது குறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்