2 மாணவர்களுக்கு பன்றி‌க் காய்ச்சல்: கல்லூரிக்கு விடுமுறை

திங்கள், 17 ஆகஸ்ட் 2009 (09:32 IST)
தாம்பரம் கல்லூரி மாணவருக்கு பன்றி காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டு‌ள்ளது. இதனால் கல்லூரிக்கு 13 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்ப‌ட்டு‌ள்ளது. சேலையூரிலும் கல்லூரி மாணவர் ஒருவருக்கு பன்றி‌க் காய்ச்சல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தாம்பரம் கிறிஸ்தவ கல்லூரியில் பொலிடிக்கல் சயின்ஸ் 2‌ஆம் ஆண்டு படி‌த்து வருபவ‌ர் சத்தியசமதன் (19). உத்தரபிரதேசத்தை சேர்ந்த இவ‌‌ர் விடுதியில் தங்கி படி‌த்து வ‌ந்தார். சில நாட்களுக்கு முன்பு இவர் கடும் காய்ச்சல், வாந்தியால் அவதிப்பட்டார். பன்றி‌க் காய்ச்சலாக இருக்குமோ என்று சந்தேகப்பட்டு, கிண்டி கிங் இன்ஸ்டிடியூட்டில் சத்தியசமதன் ரத்தப் பரிசோதனை செய்து கொண்டார்.

இதில், இவருக்கு பன்றி‌க் காய்ச்சல் நோய் இருப்பது உறுதியானது. உடனடியாக அவர் தண்டையார்பேட்டை தொற்றுநோய் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சத்தியசமதனுக்கு பன்றி‌க் காய்ச்சல் உறுதியானதால், கல்லூரி மற்றும் அவருடன் விடுதியில் தங்கி இருக்கும் மாணவர்கள் இடையே பெரும் பீதி ஏற்பட்டுள்ளது.

விடுதி மாணவ, மாணவிகளுக்கு நகராட்சி சார்பில் நேற்று மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் யாருக்கும் பன்றி‌க் காய்ச்சல் அறிகுறி இல்லை என்பது தெரிந்தது. எனினும், கல்லூரி நிர்வாகம் இன்று முதல் 13 நாட்களுக்கு கல்லூரிக்கு விடுமுறை அறிவித்து‌ள்ளது.

இதேபோல, சேலையூர் ஜார்ஜ் அவென்யூவில் வசிக்கும் கொல்கத்தாவை சேர்ந்த கல்லூரி மாணவர் சடையப்பன் போஸ் (21) என்பவருக்கும் பன்றி‌க் காய்ச்சல் இருப்பது பரிசோதனையில் உறுதியானது.

அவர் செம்மஞ்சேரியில் உள்ள சத்தியபாமா கல்லூரியில் பிடெக் படி‌த்து வரு‌கிறா‌ர். பன்றி‌க் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள அவர் தண்டையார்பேட்டை தொற்றுநோய் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

தாம்பரம், சேலையூரில் 2 கல்லூரி மாணவர்களுக்கு பன்றி‌க் காய்ச்சல் ஏற்பட்டிருப்பது அப்பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால், இப்பகுதி மக்கள் பலரும் முகக் கவசம் அணிந்தே வெளியில் செல்கின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்