2ஜி வழக்கில் தயாளு அம்மாள் சாட்சி; கருணாநிதி கருத்து

சனி, 1 ஜூன் 2013 (15:22 IST)
FILE
2ஜி வழக்கில் சாட்சி சொல்ல சிபிஐ நீதிமன்றம் தயாளு அம்மாவை நேரில் வர வேண்டும் என்று உத்தரவிட்டதை பற்றி கருணாநிதி கூறும் போது, இந்த உத்தரவு இறுதியானதல்ல, இது குறித்து வழகுரைஞர்களிடம் அலோசனை செய்துவிட்டு முடிவெடுப்போம் என்று கூறினார்.

திமுக தலைவர் கருணாநிதி இது குறித்து பேசும் போது, பொதுவாக நீதிமன்ற உத்தரவுகளைப் பற்றி எப்போதும் நான் கருத்து தெரிவிப்பது இல்லை. இந்த வழக்கைப் பொறுத்தவரையில் என் துணைவியார் தயாளு அம்மாளுக்கு உடல் நலம் சரியில்லை என்பது தமிழகம் முழுவதும் அறிந்த செய்தியாகும். அவரால் விமானத்தில் பயணம் மேற்கொள்வதே முடியாது. ஏற்கனவே அவர் சிகிச்சை பெற்று வருவதற்கான மருத்துவச் சான்றிதழ்கள் அனைத்தும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

நீதிபதிக்கு முன்னால் இந்த விவரங்கள் நேரில் எடுத்துரைக்கப்பட்ட போதே, மத்திய அரசுக்குச் சொந்தமான மருத்துவ மனையிலே உள்ள மருத்துவர்கள் குழு நேரில் வீட்டிற்கே வந்திருந்து, தயாளுவின் உடல் நிலையை பார்த்து அறிக்கை தரலாம் என்ற வேண்டுகோளினை நீதிபதி முன்பு வாதிட்டபோது, நீதிபதி அவர்களே, எந்த மருத்துவமனை என்பது பற்றி கேட்டறிந்து; புதுவையில் உள்ள “ஜிப்மர்” மருத்துவமனை என்று கூறப்பட்டு; அந்த ஜிப்மர் மருத்துவ மனையிலிருந்து அந்த மருத்துவர்களை அழைத்து வரும் செலவினை யார் ஏற்றுக் கொள்வது என்ற பிரச்சினையும் எழுந்து, அந்தச் செலவினையும் நாங்களே ஏற்றுக் கொள்வோம் என்று உறுதி கூறப்பட்டு அதையெல்லாம் நீதிபதி அவர்கள் குறித்துக் கொண்டதோடு, ஜிப்மர் மருத்துவமனை டாக்டர்கள் வரும்போது, எங்கள் குடும்ப மருத்துவரும் உடன் இருக்க அனுமதி கேட்டு, அதுவும் பரிசீலிக்கப்படும் என்று கூறப்பட்டது.

சி.பி.ஐ. தரப்பினரும் அதனை ஏற்றுக் கொண்டு, ஜிப்மர் மருத்துவ மனை டாக்டர்களே நேரில் வந்து பரிசோதிக்கலாம் என்று ஒப்புதல் அளித்தார்கள். ஆனால் இவ்வளவிற்கும் பிறகு, இரண்டு நாட்கள் கழித்து சி.பி.ஐ. நீதிபதி தற்போது நேரில் வர வேண்டுமென்று உத்தரவு பிறப்பிக்க என்ன காரணம் என்று தெரியவில்லை.

இந்த உத்தரவே இறுதியானதல்ல என்பதால், இதற்கு மேல் என்ன செய்வது என்பது பற்றி வழக்கறிஞர்களுடன் கலந்து பேசித்தான் முடிவெடுக்க வேண்டும். இதற்கு மேற்கொண்டும் என் மனைவி, நேரில் தான் வந்து சாட்சியம் அளிக்க வேண்டுமென்று வலியுறுத்தப்பட்டு, அதனால் அவருடைய தற்போதைய உடல் நிலைக்கு மேலும் ஏதாவது பாதிப்பு ஏற்படுமேயானால், அதற்கு யார் பொறுப்பேற்றுக் கொள்வார்கள்? என்று கருணாநிதி தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்