திருச்சி விமான நிலையத்தில் கடத்தல் தங்க நகைகள் சிக்கியது

திங்கள், 23 நவம்பர் 2015 (22:16 IST)
திருச்சி விமான நிலையத்தில் நேற்றிரவு சுமார் 14 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகளை சுங்கத் துறை போலீஸார் பறிமுதல் செய்தனர். மேலும், கடத்தி வந்த நபரை பிடித்து சுங்கத் துறை போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


 
 
திருச்சி விமான நிலையத்திற்கு நேற்றிரவு 11.30 மணிக்கு மலேசியாவில் இருந்து ஏர்ஏசியா விமானம் வந்தது. இந்த விமானத்தில் தங்க நகைகள் கடத்தி வருவதாக சுங்கத்துறை போலீஸார்க்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் படி, அவர்கள் விமானத்தில் இருந்து வந்த பயணிகளை தீவிரமாக கண்காணித்தனர்.
 
அப்போது சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் நடந்து வந்த ராமநாதபுரத்தை சேர்ந்த முகமது சாதிக் (35) என்பவரை பிடித்து சுங்கத்துறை போலீஸார் விசாரணை நடத்தினர்.
 
இந்த விசாரணையில் அவரது உடமைகளை சோதனை செய்தபோது அதில் மறைத்து வைத்த 5 செயின்கள், 7 வளையல்கள் இருந்தது. இதையடுத்து நகைகளை பறிமுதல் செய்த சுங்கத் துறை போலீஸார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
 
பறிமுதல் செய்யப்பட்டட இந்த நகைகளின் மதிப்பு ரூ.13 லட்சத்து 65 ஆயிரம் என்று சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். தங்கம் கடத்தி பிடிபட்ட முகமது சாதிக் மலேசிய குடியுரிமை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்