18 மாவட்டங்களில் 1 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.15 கோடி டீசல் மானியம்: கருணாநிதி

ஞாயிறு, 23 ஆகஸ்ட் 2009 (10:16 IST)
தென்மேற்கு பருவமழை பொய்த்த 18 மாவட்டங்களில் 1 லட்சம் விவசாயிகளுக்கு, டீசல் வாங்க ரூ.15 கோடி மானியம் வழங்க முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை வழக்கமான அளவைவிட குறைவாக பெய்துள்ளதால் காரிப் பருவத்தில் கடந்த ஆண்டில் 19 லட்சத்து 28 ஆயிரம் ஹெக்டேரில் மேற்கொள்ளப்பட்ட சாகுபடி பரப்பு, இந்நிதியாண்டில் கடந்த 10ம் தேதி வரை 7 லட்சத்து 26 ஆயிரம் ஹெக்டேர் என குறைந்துள்ளது.

காரீப் பருவத்தில் காவிரிப் பாசனப் பகுதியில் 79 ஆயிரத்து 800 ஹெக்டேர் பரப்பில் சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிர்களை பாதுகாக்கவும், சம்பா பருவ சாகுபடியை உரிய காலத்தில் மேற்கொள்ளவும் கடந்த மாதம் 28ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டுள்ளது.

எனினும், நிலத்தடி நீரை நம்பி, பம்பு செட்டுகளை கொண்டு சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிர்களை காப்பாற்ற கடந்த மாத 15ம் தேதி நிலவரப்படி, 50 சதவீதத்துக்கும் அதிகமாக மழை குறைபாடுள்ள அரியலூர், பெரம்பலூர், திண்டுக்கல், ஈரோடு, காஞ்சீபுரம், கரூர், நாகப்பட்டினம், நாமக்கல், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தஞ்சாவூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, தூத்துக்குடி, வேலூர், விருதுநகர் ஆகிய 18 மாவட்டங்களில் பயன்படுத்தப்படும் 99 ஆயிரத்து 776 பம்பு செட்டுகளுக்கு 50 சதவீதம் டீசல் மானியம் வழங்க முதல்வர் கருணாநிதி ஆணையிட்டுள்ளார்.

அதன்படி, 1 லிட்டருக்கு ரூ.15 வீதம், அதிகபட்சமாக 1 ஹெக்டேருக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். ஒரு விவசாயிக்கு 2 ஹெக்டேர் நிலத்துக்கு டீசல் மானியம் என்ற வகையில் வழங்கிட, ரூ.15 கோடி நிதி ஒதுக்கீடு செய்து முதல்வர் கருணாநிதி ஆணையிட்டுள்ளார்.

இத்திட்டத்தின்படி, சம்பந்தப்பட்ட மாவட்டங்களில் வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலம் மாவட்ட ஆட்சித் தலைவர்களால் அடுத்த மாதம் 30ம் தேதி வரை விவசாயிகளுக்கு டீசல் மானியம் அனுமதிக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்