'ம‌க்க‌ளி‌ன் உண‌ர்வுக‌ள் பு‌ண்படாதபடி பட‌ங்களை தயா‌ரி‌யு‌ங்க‌ள்'

வெள்ளி, 1 பிப்ரவரி 2013 (13:06 IST)
FILE
உணர்வுகளைத் தூண்டிவிட்டு அமைதிக்கு குந்தகம் விளைவிக்கக்கூடிய திரைப்படங்களைத் தயாரிக்கும்போது, மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, அவர்களுடைய உணர்வுகள் புண்படாதவகையில் உருவாக்கப்பட வேண்டும் என்று திரைப்படத் தயாரிப்பாளர்களை ஆளுந‌ர் ரோசை‌ய்யா கேட்டுக்கொ‌ண்டு‌ள்ளா‌ர்.

த‌மிழக ச‌ட்ட‌ப்பேரவை‌யி‌ல் ஆளுந‌ர் ஆ‌ற்‌றிய உரை‌யி‌ல், அரசியல் நிலைத்தன்மையுடன், சட்டம் ஒழுங்கு முறையாகப் பராமரிக்கப்படுவது பொருளாதாரச் செழுமைக்கு இன்றியமையாத் தேவையாகும். முதலமைச்சரின் தலைமையின் கீ‌ழ், சட்டம் ஒழுங்கு சீரிய முறையில் பாதுகாக்கப்பட்டு, மாநிலம் அமைதிப் பூங்காவாக மாறியுள்ளது. சாதிமத உணர்வுகளைத் தூண்ட முயலும் எவரையும் இந்த அரசு அனுமதிக்காது.

நிலம் அபகரிப்போர், சமூக விரோத சக்திகள், பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கக்கூடிய அமைப்புகள் போன்றவை முழுமையாக ஒடுக்கப்பட்டுள்ளன. நில அபகரிப்பு முழுமையாக தடுக்கப்பட்டு, அதில் ஈடுபட்ட குற்றவாளிகள் சட்டத்தின் முன்பு நிறுத்தப்பட்டுள்ளனர்.
சட்டம் ஒழுங்குப் பிரச்சினைகளை திறம்படக் கையாளக் காவல்துறைக்குத் தமது வழிகாட்டுதலை வழங்கி உறுதியான ஆதரவையும், முழுமையான சுதந்திரத்தையும் அளித்துள்ள முதலமைச்சரை பாராட்டுகிறேன்.

அவரின் உறுதியான, தீர்க்கமான முடிவின் காரணமாக உணர்வுகளைத் தூண்டிவிட்டு அமைதிக்கு குந்தகம் விளைவிக்கக்கூடிய ‘டேம் 999’, போன்ற திரைப்படங்கள் உரிய தருணத்தில் தடைசெ‌ய்யப்பட்டதால், பெரும் பாதிப்புக்கு இட்டுச் சென்றிருக்கக்கூடிய சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் எதுவும் மாநிலத்தில் எழாமல் தடுக்கப்பட்டுள்ளன.

இது போன்ற திரைப்படங்களைத் தயாரிக்கும்போது, மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, அவர்களுடைய உணர்வுகள் புண்படாதவகையில் உருவாக்கப்பட வேண்டும் என்று திரைப்படத் தயாரிப்பாளர்களை ஆளுந‌ர் கேட்டுக்கொ‌ண்டு‌ள்ளா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்