‌கிள‌‌ர்‌ச்‌சி‌யி‌ல் ஈடுபடுவோ‌ம்- கேரள அரசுக்கு வைகோ எச்சரிக்கை

வெள்ளி, 1 ஜூலை 2011 (12:31 IST)
முல்லை பெரியாறு பிரச்சனையில் கேரள அரசு தான்தோன்றித்தனமாகத் தமிழ்நாட்டுக்கு விரோதமாக செயல்பட முனைந்தால், ம.தி.மு.க. நேரடியாகக் கிளர்ச்சியில் ஈடுபடும் என்று ‌அ‌க்க‌ட்‌சி‌யி‌ன் பொது‌ச் செயல‌ர் வைகோ எ‌ச்ச‌ரி‌த்து‌ள்ளா‌ர்.

இது தொட‌ர்பாக அவ‌ர் வெளியிட்டுள்ள அறிக்கையில், முல்லைப்பெரியாறு பிரச்சனையில் உண்மைக்கு மாறான பொய்ச்செய்திகளைப் பரப்புவதையே கேரள அரசு தொடர்ந்து செய்து வருகிறது. புதிய அணை கட்டுவது குறித்து கேரள அமைச்சர் கூறியிருப்பது கண்டனத்திற்குரியதாகும். பென்னி குயிக் கட்டிய அணையில் 142 அடிக்கு தண்ணீரை உயர்த்திக் கொள்ள - ஏன் அதற்கு மேல் 152 அடி வரை உயர்த்திக் கொள்ள - தமிழ்நாட்டிற்கு எல்லா உரிமையும் உண்டு. புதிய அணை என்ற பேச்சுக்கே இடம் தர முடியாது.

பென்னி குயிக் கட்டிய அணையைச் சேதப்படுத்த முயன்றாலோ, புதிய அணை கட்ட முயன்றாலோ, கேரளாவுக்குச் செல்கின்ற அனைத்துப் பாதைகளையும் மறித்து தமிழகம் பொருளாதார முற்றுகை போட நேரிடும் என்று கேரள அரசுக்கு, தமிழக அரசு எச்சரிக்கை விடுக்க வேண்டும். புதிய அணையைக் கேரள அரசு அமைக்குமானால், பள்ளத்தில் அமையப்போகும் அந்த அணையிலிருந்து தண்ணீர் கொடுக்கவே முடியாமல் போய்விடும். கேரள அரசு நினைத்தாலும், தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் கொடுக்க முடியாது.

பென்னி குயிக் கட்டிய அணை, கேரளாவில் உள்ள அனைத்து அணைகளையும் விட மிகவும் பலமானது ஆகும். ஏற்கனவே உச்ச நீதி மன்றம் அமைத்த இரண்டு நிபுணர்க் குழுக்கள், முல்லைப் பெரியாறு அணை வலுவாக உள்ளது என்று திட்டவட்டமாக அறிக்கை சமர்ப்பித்தன.

கேரள அரசின் அராஜகமான போக்கைத் தடுத்து நிறுத்தும் வகையில், தமிழக அரசு எச்சரிக்கை செய்ய வேண்டும். இந்தியாவின் ஒருமைப்பாட்டில் உண்மையிலேயே அக்கறை இருக்குமானால் மத்திய அரசு, கேரள அரசின் அக்கிரமமான போக்கைத் தடுத்தாக வேண்டும். கேரள அரசு தான்தோன்றித்தனமாகத் தமிழ்நாட்டுக்கு விரோதமாக செயல்பட முனைந்தால், ம.தி.மு.க. நேரடியாகக் கிளர்ச்சியில் ஈடுபடும் எ‌ன்று வைகோ எ‌‌ச்ச‌ரி‌த்து‌ள்ளா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்