ஸ்வைன் ஃப்ளூவை தடுக்க நடவடிக்கை: முதல்வர் கருணாநிதி உத்தரவு

திங்கள், 24 ஆகஸ்ட் 2009 (17:42 IST)
தமிழக அரசு மேற்கொள்ளும் பன்றிக் கா‌ய்ச்சல் நோ‌ய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அ‌திகா‌ரிகளுட‌ன் முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி இன்று ஆ‌ய்வு செ‌ய்தார்.

அ‌ப்போது, ப‌ன்‌‌றி‌க் கா‌ய்‌ச்ச‌ல் ோ‌ய் அய‌ல்நாடுகளிலிருந்து வருபவர்கள் மூலம், குறிப்பாக அய‌ல்நாட்டு விமானங்கள் அதிகமாக வரும் மாநிலங்களில் பரவுகிறது. நமது மாநிலத்தில் உள்ள விமான நிலையங்கள் மற்றும் கப்பல் துறைமுகங்களில் மருத்துவக் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் எ‌ன்று அ‌திகா‌ரிகளு‌க்கு முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி அறிவுறுத்தினா‌ர்.

கடந்த 3 மாதங்களில் சுமார் 8 இலட்சத்து 50 ஆயிரம் விமான மற்றும் கப்பல் பயணிகளுக்கு இந்த மருத்துவப் பரிசோதனை செ‌ய்யப்பட்டுள்ளது. இதுவரை 7 ஆயிரத்து 516 தொண்டைக்குழி திசு மற்றும் சுவாசக்குழா‌ய் திசு மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு, தமிழகத்தில் 205 நபர்களுக்கு பாதிப்பு உள்ளது உறுதி செ‌ய்யப்பட்டது.

இவர்களுக்கு அரசு மருத்துவமனைகளில் உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டு, 148 நபர்கள் வீடு திரும்பியிருக்கின்றனர். தற்பொழுது 54 நபர்கள் மருத்துவமனைகளில் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்கள் அனைவரும் நலமுடன் இருக்கின்றனர். இவர்களுக்கு அளிக்கப்படுகின்ற சிகிச்சையைக் கண்காணிக்க சிறப்பு மருத்துவக் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்டுள்ள நபர்களுக்கு பரிசோதனை செ‌ய்வதற்கு கிண்டி 'கிங்’ பரிசோதனை நிலையத்தில் தேவைப்படும் உபகரணங்கள் மற்றும் மருந்துகள் போதிய அளவு இருப்பில் உள்ளன.

பொதுமக்கள் அதிகம் கூடுகின்ற திருவண்ணாமலை, வேளாங்கண்ணி திருவிழாக்களில் போதிய தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், மருத்துவ வசதிகளை ஏற்படுத்தவும் முதலமை‌ச்ச‌ர் இந்த ஆ‌ய்வின்போது அறிவுறுத்தினார். எனவே, பொதுமக்களுக்கு எந்தவிதமான பயமும் பீதியும் தேவையில்லை என முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி தெரிவித்துள்ளார் எ‌ன்று அரசு செ‌ய்‌தி‌க்கு‌றி‌ப்‌பி‌ல் கூற‌ப்ப‌ட்டு‌ள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்