வீரபாண்டி ஆறுமுகத்தை குண்டர் சட்டத்தில் கைது செய்தது செல்லாது - கோர்ட் தீர்ப்பு

வெள்ளி, 12 அக்டோபர் 2012 (16:22 IST)
சேலம் அங்கம்மாள் காலனி நிலப்பிரச்சினை வழக்கில் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள திமுக முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தை குண்டர் சட்டத்தில் கைது செய்தது செல்லாது என்று சென்னை உயநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

18.6.2012 அன்று அவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. இதற்கான உத்தரவை சேலம் போலீஸ் உயர் அதிகாரிகள் வேலூர் சென்று சிறை அதிகாரிகளிடம் வழங்கினர்.

குண்டர் சட்டத்தில் வீரபாண்டி ஆறுமுகம் கைது செய்யப்பட்டது தவறு, இதில் இருந்து அவரை விடுவிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதன் மீது விசாரணை நடந்தது. இறுதிக்கட்ட விசாரணை நடந்து முடிந்தது.

இன்றைய தீர்ப்பில் நீதிபதிகள் கூறும்போது, "பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தியதாக வீரபாண்டி ஆறுமுகத்தை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ததாக கூறப்பட்டுள்ள காரணம் ஏற்கக்கூடியதல்ல. அவர்மீது கூறப்பட்டிருந்த குற்றச்சாட்டுக்களை படித்து பதிலளிக்க அவருக்கு தகுந்த வாய்ப்பு அளிக்கப்படவில்லை. அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்வதற்கு போலீஸார் கூறிய காரணங்களை ஏற்க இயலாது. இந்த சட்டத்தின்கீழ் கைது செய்ய எந்த முகாந்திரமும் இல்லை. எனவே, அவர் மீது பிறப்பிக்கப்பட்ட குண்டர் தடுப்பு சட்ட நடவடிக்கையை ரத்து செய்து கோர்ட்டு உத்தரவிடுகிறது" என்றார்.

இதனையடுத்து வீரபாண்டி ஆறுமுகம் விடுதலையாகிறார். ஏற்கனவே 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அதற்கு முன் ஜாமீன் பெற்றுள்ளார் வீரபாண்டி ஆறுமுகம்.

வெப்துனியாவைப் படிக்கவும்