விழுப்புரம் 144 தடையை நீக்க வேண்டும்- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு

சனி, 1 ஜூன் 2013 (18:31 IST)
FILE
விழுப்புரம் மாவட்டத்தில் விதிக்கப்பட்டுள்ள 144 தடை உத்தரவை அரசு விலக்கிக் கொள்ள வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழுக் கூட்டம் சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. செயற்குழு உறுப்பினர் பி.சண்முகம் கூட்டத்துக்குத் தலைமை வகித்தார். மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், மத்தியக் குழு உறுப்பினர்கள் டி.கே.ரங்கராஜன், உ.வாசுகி, அ.சவுந்தரராசன், பி.சம்பத், கே.பாலகிருஷ்ணன் உள்பட செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு, இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் நலிவடைந்த மற்றும் சமூக ரீதியாக வாய்ப்பு மறுக்கப்பட்ட குழந்தைகளுக்கு தனியார் பள்ளிகளிலும் 25 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும்.

இதனைத் தனியார் பள்ளிகள் முறையாக அமல்படுத்தவில்லை. அதிகாரிகள் கொண்ட குழு மூலம் 25 சதவீத இடஒதுக்கீட்டை அனைத்துப் பள்ளிகளிலும் நிரப்பிட தமிழக அரசு, இந்த ஆண்டு முயற்சி மேற்கொள்ள வேண்டும்.

மரக்காணத்தில் ஏறப்பட்ட வன்முறையையொட்டி விழுப்புரம் மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. வன்முறை சம்பவங்கள் நிறுத்தப்பட்டு, அங்கு அமைதி திரும்பிய பிறகும்கூட தடை உத்தரவு காலவரம்பின்றி அமலில் உள்ளது.

இதனால் ஜனநாயக இயக்கங்களின் செயல்பாடு முடங்கியுள்ளது. 144 தடை உத்தரவை நீண்ட காலம் நீடிக்கச் செய்வது, ஜனநாயக நடைமுறைகளுக்கு முரணாகும். எனவே, விழுப்புரம் மாவட்டத்திலும், இதர இடங்களிலும் தற்போது அமலில் உள்ள 144 தடை உத்தரவை அரசு விலக்கிக் கொள்ள வேண்டும் உள்ளிட்ட 3 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

வெப்துனியாவைப் படிக்கவும்