விஜயகாந்துக்கு நெஞ்சுவலி: மருத்துவமனையில் அனுமதி

புதன், 9 ஜூலை 2014 (13:04 IST)
தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதையடுத்து அவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
 
தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு திடீர் உடல்நல குறைவு ஏற்பட்டுள்ளது. இன்று காலையில் அவருக்கு லேசான நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் ரோட்டில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் விஜயகாந்த் அனுமதிக்கப்பட்டார். அங்கு 3–வது மாடியில் உள்ள வார்டில் தங்கி இருக்கிறார். காலை 7 மணி அளவில் அப்பல்லோ மருத்துவமனிக்கு சென்ற விஜயகாந்த்துக்கு மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டன. 
 
இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருடன் குடும்பத்தினர் இருந்து கவனித்து வருகிறார்கள். விஜயகாந்துக்கு ஆஞ்சோ கிராம் சிகிச்சை அளிக்கப்பட இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா கூட்டணியில் இடம் பெற்றிருந்த விஜயகாந்த் தமிழகம் முழுவதும் சூறாவளி பிரசாரம் செய்தார். பா.ஜனதா கூட்டணியில் மற்ற கூட்டணி தலைவர்கள் எல்லாம் ஒதுங்கி விட்ட நிலையில் விஜயகாந்த் மட்டுமே பிரசார பீரங்கியாக வலம் வந்தார். ஆனால் தேமுதிக ஒரு இடங்களில் கூட வெற்றி பெறவில்லை. 
 
தேர்தல் தோல்வியால் அதிர்ச்சி அடைந்து காணப்பட்ட விஜயகாந்த் கொஞ்சம் கொஞ்சமாக அதில் இருந்து மீண்டு வந்தார். இதையடுத்து கட்சியை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் ‘‘உங்களுடன் நான்’’ என்ற நிகழ்ச்சிக்கு அவர் ஏற்பாடு செய்தார். மாவட்டம் வாரியாக சுற்றுப்பயணம் செய்து இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற விஜயகாந்த் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனையும் மேற்கொண்டார். இது போன்ற தொடர் சுற்றுப்பயணங்கள் காரணமாகவே விஜயகாந்துக்கு உடல் நல குறைவு ஏற்பட்டதாக தெரிகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்