வாலிபருடன் தனியாக இருந்ததால் கொலை - கணவன் வாக்குமூலம்!

செவ்வாய், 24 செப்டம்பர் 2013 (09:22 IST)
FILE
எர்ணாவூரில் 3 குழந்தைகளின் தாய் மர்மச்சாவு வழக்கில் வேறு வாலிபருடன் தனியாக இருந்ததால் மனைவியை கணவனே கழுத்தை நெரித்து கொலை செய்ததாக கைது செய்யப்பட்டுள்ளார்.

எர்ணாவூர் சுனாமி குடியிருப்பு 48-வது பிளாக்கில் வசித்து வருபவர் கிருஷ்ணமூர்த்தி. மீனவர். இவரது மனைவி நதியா (வயது 24). இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.

நேற்று முன்தினம் நதியா பலத்த காயங்களுடன் வீட்டில் உள்ள குளியலறையில் பிணமாக கிடந்தார். கிருஷ்ணமூர்த்தி 3 குழந்தைகளுடன் தலைமறைவாகி விட்டார். இதுகுறித்து நதியாவின் தாய் காந்தா கொடுத்த புகாரின் பேரில் எண்ணூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்த் வழக்குப்பதிவு செய்து கிருஷ்ணமூர்த்தியை சந்தேகத்தின் பேரில் தேடி வந்தார்.

கோவளம் கடற்கரையில் குழந்தைகளுடன் நின்று கொண்டிருந்த கிருஷ்ணமூர்த்தியை போலீசார் மடக்கிப்பிடித்து போலீஸ் நிலையம் கொண்டு வந்து விசாரித்தனர். அப்போது அவர் மனைவியை கழுத்தை நெரித்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.

இதனையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

போலீசாரிடம் அவர் கொடுத்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:

“நான் கடந்த 5 நாட்களுக்கு முன்பு மீன்பிடிப்பதற்காக கடலுக்கு சென்றேன். மீன்பிடித்து விட்டு நேற்று முன்தினம் இரவு 1 மணியளவில் வீட்டிற்கு வந்து கதவை தட்டினேன். நீண்டநேரமாக கதவு திறக்கவில்லை.

சிறிதுநேரம் கழித்து என் மனைவி வந்து கதவை திறந்தார். அப்போது ஒரு வாலிபர் என்னை கீழே தள்ளி விட்டுவிட்டு ஓடி விட்டான். அவன் யார்? என்று கேட்டு மனைவியிடம் தகராறு செய்தேன். ஏற்கனவே அவளது நடத்தையில் சந்தேகம் இருந்ததால் ஆத்திரம் தலைக்கேறியது.

உடனே அருகில் கிடந்த நைலான் கயிறை எடுத்து அவள் கழுத்தில் போட்டு இறுக்கி கொன்றேன். பிணத்தை குளியலறையில் இழுத்து போட்டு விட்டு குழந்தைகளை கூட்டிக்கொண்டு திருவான்மியூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று விட்டேன். பின்னர், எங்கு செல்லலாம் என்று தெரியாமல் கோவளம் கடற்கரையில் நின்று கொண்டிருந்தேன். அப்போது போலீசார் என்னை பிடித்து விட்டனர்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்