ரூ. 1,500 கோடி முதலீட்டில் போர்டு கார் தொழிற்சாலை விரிவாக்கம்; கருணாநிதி முன்னிலையில் பு‌ரி‌ந்துண‌ர்வு ஒப்பந்தம்

வியாழன், 24 செப்டம்பர் 2009 (15:26 IST)
TN.Gov.
TNG
ரூ.1,500 கோடி முதலீட்டில் போர்டு கார் தொழிற்சாலை விரிவாக்க‌த்‌தி‌‌ற்கான பு‌ரி‌ந்துண‌ர்வு ஒ‌ப்ப‌ந்த‌ம் முதலமை‌ச்ச‌ர் கருணாநிதி முன்னிலையில் இ‌ன்று நடைபெ‌ற்றது.

அமெரிக்க நாட்டின் போர்டு மோட்டார் கார்ப்பரேஷன் நிறுவனத்திற்கு சொந்தமான போர்டு இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் 1996ஆம் ஆண்டில் சென்னைக்கு அருகில் மறைமலைநகர் கீழக்கரணை கிராமத்தில் கார் தயாரிப்பு தொழிற்சாலை ஒன்றினை நிறுவி, ஏறத்தாழ 2100 தொழிலாளர்களை நியமனம் செய்து போர்டு ஐகான், போர்டு என்டவர், போர்டு ப்யூஷன் மற்றும் போர்ட பியஸ்டா ரக கார்களைத்தயாரித்து வருகிறது.

இத் தொழிற்சாலையை ரூ.1,500 கோடி கூடுதல் முதலீட்டில் விரிவாக்கம் செய்திடவும், புதிதாக என்ஜின் தயாரிப்பு தொழிற்சாலை ஒன்றினை நிறுவிடவும் போர்டு இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

அதன்படி ஏறத்தாழ 1000 தொழிலாளர்களை புதிதாக நியமித்து தொழிற்சாலையின் உற்பத்தித்திறன் ஆண்டு ஒன்றுக்கு ஒரு லட்சம் கார்கள் என்பதை 2 லட்சம் கார்கள் என உயர்த்திடவும், ஆண்டு ஒன்றுக்கு 2 லட்சத்து 50 ஆயிரம் கார் என்ஜின்களைத் தயாரித்திடவும் போர்டு இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் தற்போது திட்டமிட்டுள்ளது.

போர்டு இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் இந்த ‌விரிவாக்கத் திட்டத்தினை விரைந்து செயல்படுத்துவதற்காக முதலமைச்சர் கருணாநிதி, துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதர் திமோத்தி ஜே.ரோமர் ஆகியோர் முன்னிலையில் இன்று நடைபெற்ற புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தமிழக அரசின் சார்பாக தொழில் துறை முதன்மைச்செயலர் எம்.எப்.பாருகி, போர்டு இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் சார்பாக அதன் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் மைக்கேல் போனஹம் ஆகியோர் கையெழுத்திட்டனர்.

இந்நிகழ்ச்சியின் போது தமிழக அரசின் தலைமை செயலர் கே.எஸ்.ஸ்ரீபதி, சென்னை அமெரிக்கத்துணைத் தூதர் ஆண்ட்ரூ சிம்கின், போர்டு மோட்டார் கார்ப்பரேஷன் நிறுவனத்தலைவர் மற்றும் தலைமைச் செயல் அலுவலர் ஆலன் முலாலே, அந்நிறுவனத்தின் செயல் துணைத்தலைவர் ஜான் ஜி.பார்க்கர், தமிழக அரசின் நிதித்துறை முதன்மைச் செயலர் ஞானதேசிகன், சிப்காட் நிறுவனத்தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் டாக்டர் கோவிந்தன், தமிழ்நாடு தொழில் வழிகாட்டி மையத்தின் செயலாக்கத் துணைத்தலைவர் வேல்முருகன் ஆகியோர் உடன் இருந்தனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்