மேட்டூர் அணையிலிருந்து பாசனத்திற்கு நீர் திறப்பு; விவசாயிகள் மகிழ்ச்சி!

வெள்ளி, 2 ஆகஸ்ட் 2013 (16:05 IST)
FILE
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 20 ஆயிரம் கன அடிக்கும் கீழ் சரிந்துள்ள நிலையில், அணையிலிருந்து டெல்டா பகுதி சம்பா சாகுபடிக்காக இன்று பகல் 12.30 மணிக்கு 12000 கனஅடி நீர் திறக்கப்பட்டது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

கர்நாடக அணைகளிலிருந்து உபரி நீர் திறக்கப்பட்டுள்ளதால் மேட்டூர் அணையின் நீர் மட்டம் வேகமாக உயர்ந்து வந்தது. கடந்த வாரத்தில் அணைக்கு 89 ஆயிரம் கனஅடி நீர் வந்த நிலையில், இன்று காலை 8 மணி நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 19,340 கனஅடி நீர் வந்து கொண்டிருந்தது. அணையின் நீர் மட்டம் 109 அடியாக உயர்ந்துள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 10,800 கன அடி நீர் திறந்து விடப்பட்டது.

நீர் இருப்பு 76.99 டிஎம்சி. கர்நாடக நீர் பிடிப்பு பகுதிகளில் மீண்டும் கனமழை பெய்வதால் கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் இருந்து நேற்று முதல் 88 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து இன்று இரவு முதல் மீண்டும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் காவிரி டெல்டா மாவட்டங்களில் சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து இன்று பகல் 12.30 மணிக்கு நீர் திறந்து விடப்பட்டது.

நீர்திறப்பு நிகழ்ச்சியில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். நீர் திறப்பு மூலம் காவிரி டெல்டா பகுதிகளில் சுமார் 12 லட்சம் ஏக்கர் நிலம் பாசனம் பெறும். வழக்கமாக ஜூன் 12 ஆம் தேதி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படும் நிலையில் 50 நாள் தாமதமாக அணை திறக்கப்பட்டுள்ளது. அணையின் நீர் மட்டம் திருப்திகரமாக உள்ளதால் சாகுபடி முழுமையாக முடியும் வகையில் ஜனவரி 28 ஆம் தேதி வரை தண்ணீர் திறக்கப்படும் என்று தெரிகிறது.

டெல்டா பாசனத்துக்கு நீர் திறப்பால் மகிழ்ச்சி அடைந்துள்ள விவசாயிகள், சாகுபடி பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதேபோல் மேட்டூர் அணையின் கிழக்கு மற்றும் மேற்கு கரை கால்வாய்களிலும் நடப்பு ஆண்டு பாசனத்துக்காக இன்று நீர் திறக்கப்பட்டது. 137 நாட்கள் பாசனத்துக்கு நீர் திறக்கப்படுகிறது. இதன் மூலம் சேலம், ஈரோடு மாவட்டங்களில் 45 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும்.

வெப்துனியாவைப் படிக்கவும்