மூதாட்டியை கொடூரமாக தாக்கி நகை பறித்த கள்ளகாதல் ஜோடி கைது

Ilavarasan

திங்கள், 5 மே 2014 (12:41 IST)
கோவை அருகே 90 வயது மூதாட்டியை செங்கல்லால் தாக்கி 3 பவுன் தங்க நகைகளை பறித்த கள்ளக்காதல் ஜோடி கையும் களவுமாக பிடிபட்டனர்.
 
கோவை சின்னத் தடாகத்தை சேர்ந்த ராயப்பனின் மனைவி கருப்பம்மாள் (வயது 90). சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்த கருப்பம்மாளை சிலர் செங்கல்லால் தாக்கி அவர் அணிந்திருந்த 3 பவுன் நகையை பறித்தனர். பின்னர் மயங்கிய அவரை பாத் ரூமில் இழுத்து போட்டு விட்டு தப்பிவிட்டனர்.
 
படுகாயமடைந்து உயிருக்கு போராடிய கருப்பம்மாளை அவரது மகன் ராயப்பன் மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தார். இது குறித்து துடியலூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். ஆய்வாளர் நெல்சன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். துணை ஆய்வாளர் கிருஷ்ணகுட்டன், பார்த்தீபன், ரங்கராஜன், கணேசன் ஆகியோர் தீவிர விசாரணையில் இறங்கினர்.
 
கடந்த 1 வாரத்துக்கு முன் பக்கத்து வீட்டில் கணவன்– மனைவி என்று கூறி இருவர் குடிவந்தனர். நகைபறிப்பு சம்பவம் நடந்த பின்னர் அவர்கள் மாயமாகி விட்டனர் என்பது தெரியவந்தது.
 
அவர்கள் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்கள்? என்ற விபரம் அக்கம் பக்கத்தினருக்கும் தெரியவில்லை. எனினும் காவல்துறையினர் இரவு பகலாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். குறிப்பாக புதிதாக குடிவந்தவர்கள் வீட்டை கண்காணித்தனர்.
 
நேற்று இரவு குடிவந்த பெண் மட்டும் அந்த வீட்டுக்கு வந்தார். வீட்டை காலிசெய்ய வேண்டும் என்று கூறி அவசர அவசரமாக பாத்திரம், துணிகளை மூட்டை கட்டினர். அடுத்ததாக கணவர் என்று கூறியவரும் வந்தார். 2 பேரும் வீட்டில் உள்ள பொருட்களை எடுத்துக்கொண்டு புறப்பட்டனர். செல்லும் வழியில் காட்டுப்பகுதியில் குழிபறித்தனர். அப்போது அவர்களை காவல்துறையினர் மடக்கினர்.

தோண்டிய குழிக்குள் 3 பவுன் நகை புதைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டு பிடிக்கப்பட்டு கைப்பற்றப்பட்டது. 2 பேரையும் துடியலூர் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர்.
 
விசாரணையில் அவர்கள் பல்லடம் அனுப்பட்டியை சேர்ந்த சிவா என்ற சிவக்குமார் (33) என்பதும் இவருக்கு ஏற்கனவே திருமணமாகி ராதா என்ற மனைவி உள்ளார் என்பதும் கருத்து வேறுபாட்டால் ராதா செஞ்சேரி மலைக்கு சென்று விட்டதும் தெரியவந்தது.
 
சிவக்குமாருடன் வந்த பெண் பல்லடம் லட்சுமி மில் பகுதியில் வசித்து வந்த பாண்டி மீனா (30) என்பது தெரியவந்தது. பாண்டி மீனாவும் கணவரை பிரிந்தவர்.
 
இந்நிலையில் சிவா பெயிண்ட் வேலை செய்ய பாண்டிமீனாவின் பக்கத்து வீட்டுக்கு சென்றார். அப்போது சிவாவுக்கும் பாண்டி மீனாவுக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டது.
 
அதன் பின்னர் இருவரும் கணவன் மனைவிபோல் வாழ்ந்தனர். சிவா கோழிக்கறி வெட்டும் வேலையும் செய்து வந்தார். சம்பவத்தன்று கோழிக் கடை உரிமையாளர் வெங்கடா சலம் தனது வீட்டை இருவரும் பார்த்துக் கொள்ளுங்கள். நான் குடும்பத்துடன் ஒரு நிகழ்ச்க்கு செல்லவேண்டும் என்று கூறிவிட்டு சென்று விட்டார். 
 
இதைபயன்படுத்திய கள்ளக்காதல் ஜோடி வீட்டில் இருந்த கைக்கு கிடைத்த பொருட்கள், பணத்தை திருடியது. அதன்பின்னர் அங்கிருந்து தப்பிக்க கோவைக்கு வந்தனர்.
 
கோவையில் பாலு என்பவர் வாடகை வீட்டை ஏற்பாடு செய்து கொடுத்தார். தாங்கள் கணவர்– மனைவி என்று அருகில் உள்ளவர்களிடம் கூறினர். இந்நிலையில் தான் மூதாட்டி கருப்பம்மாள் கழுத்தில் நகையுடன் இருப்பது தெரியவந்தது.
 
கருப்பம்மாள் அணிந்துள்ள நகையை பறித்து விட்டால் வாழ்க்கையில் செட்டில் ஆகிவிடலாம் என்று நினைத்தனர். அதன்படி சம்பவத்தன்று காலை 10.30 மணிக்கு மூதாட்டி வீட்டில் தனியாக இருந்தார். பாண்டி மீனா மூதாட்டியின் அருகில் சென்று அவர் அணிந்திருந்த நகையை பறித்தார். இதில் மூதாட்டி சத்தம்போடவே காட்டிக்கொடுத்து விடுவார் என்று அருகில் கிடந்த செங்கல்லை எடுத்து மூதாட்டியின் தலையில் அடித்தார்.
 
ரத்தவெள்ளத்தில் மயங்கி சாய்ந்த மூதாட்டியை 2 பேரும் அருகில் இருந்த பாத் ரூமுக்குள் தரதரவெனு இழுத்து போட்டனர். அனைத்து பிரச்சனைகளும் தீர்ந்த பின்னர் பறித்த நகையை எடுத்துக்கொள்ளலாம் என்று அருகில் உள்ள காட்டுக்குள் குழிதோண்டி புதைத்தனர். அதை எடுக்கும்போது வசமாக சிக்கிக்கொண்டனர். இருவரையும் துடியலூர் காவல்துறையினர் கைது செய்தனர்.
 
மருத்துவமனியில் மூதாட்டியின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். ஒருவேளை கருப்பம்மாள் இறந்து விட்டால் 2 பேரும் மீதும் கொலை வழக்குபதிவு செய்யப்படும்.

வெப்துனியாவைப் படிக்கவும்