முருகன் - நளினி மகள் லண்டனில்ருந்து சென்னை வருகிறார்
வியாழன், 20 பிப்ரவரி 2014 (13:23 IST)
FILE
முருகன் - நளினி உள்ளிட்ட 7 பேர் விடுதலை செய்யப்படுவார்கள் என்ற தமிழக அரசின் அறிவிப்பை முன்னிட்டு நளினி மற்றும் முருகனின் மகளான ஹரித்திரா லண்டனிலிருந்து சென்னை வருகிறார்.
ராஜீவ் கொலை வழக்கில் தூக்கு தண்டனை பெற்ற முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது. பேரறிவாளன், சாந்தன், முருகன் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து, உச்சநீதிமன்ற உத்தரவு பிறப்பித்ததை தொடர்ந்து இதற்கான அறிவிப்பை முதலமைச்சர் ஜெயலலிதா சட்டசபையில் நேற்று அறிவித்தார்.
மத்திய அரசு 3 நாட்களில் தமிழக அரசின் பரிந்துரையை ஏற்று, 7 பேரையும் விடுதலை செய்யும் முடிவை எடுக்கா விட்டால் தமிழக அரசின் அதிகாரத்தை பயன்படுத்தி நாங்களே அவர்களை விடுதலை செய்வோம் என்று அவர் கூறியுள்ளார்.
23 ஆண்டு சிறை வாசத்துக்கு பின்னர், விடுதலையாகும், முருகன்-நளினி தம்பதிகளும் சாந்தன், பேரறிவாளன், ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகியோரும் மிச்சமிருக்கும் தங்களது வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் கழிக்க திட்டமிட்டுள்ளனர்.
இதற்காக 7 பேருமே தங்களது விடுதலைக்காக ஆவலுடன் காத்திருக்கிறார்கள். காதலர்களான முருகனும், நளினியும், புதுமணத் தம்பதிகளாகியிருந்த நேரத்தில் தான், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். விசாரணை கைதியாக செங்கல் பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த போது நளினி 5 மாத கர்ப்பிணி. வயிற்றில் குழந்தையை சுமந்தபடியே கடுமையான வலியுடன் காலம் தள்ளினார் நளினி.
டாக்டர்கள் குறித்துக் கொடுத்த தேதிக்கு முன்னரே நளினி அழகான பெண் குழந்தையை சிறையிலேயே பெற்றேடுத்தார். அக் குழந்தைக்கு ஹரித்திரா என்று பெயரிட்டனர். சிறையில் பூத்த மலரான ஹர்த்திராவுக்கு 2½ வயது இருக்கும் போது நளினியை சேலம் சிறைக்கு மாற்றியிருக்கிறார்கள். அப்போது பசுமாட்டையே கண்கொட்டாமல் ஆச்சரியமாக பார்த்திருக்கிறார் ஹரித்திரா.
இதற்கு மேலும் தங்களது குழந்தை வெளி உலகமே தெரியாமல் சிறைக்குள் வளர வேண்டாம் என்று முடிவெடுத்த அவர்கள் ஹரித்திராவை வெளியில் தங்களது உறவினர்களிடமோ அல்லது தெரிந்தவர்களிடமோ கொடுத்து வளர்க்கச் சொல்லலாம் என்று திட்டமிட்டனர்.
இதன் பின்னர், ராஜீவ் கொலை வழக்கில் சகசிறை வாசியாக இருந்த சுசிந்திரனின் தாயிடம் ஹத்திராவை ஒப்படைத்தனர். அவர் சிறிது காலம் கோவையில் வைத்து ஹரித்திராவை வளர்த்து வந்தார். பின்னர் ஈழத்துக்கு சென்ற அவர், தற்போது 22 வயது இளம் பெண்ணாக லண்டனில் வசித்து வருகிறார். மருத்துவம் தொடர்பான படிப்பை படித்து வரும் ஹரித்திரா, பெற்றோரின் விடுதலையாகப்போகும் தகவலால் மகிழ்ச்சியில் திளைத்துப் போயுள்ளார். நளினி-முருகனின் விடுதலைக்காக காத்திருக்கும் ஹரித்திரா அவர்களை சந்திப்பதற்காக சென்னை வருகிறார்.
நளினியும், முருகனும் விடுதலையாகும் தேதி தெரிந்த பின்னர், ஹரித்திராவின் பயண தேதி திட்டமிடப்பட உள்ளது.
சென்னை வரும் அவர் தனது பெற்றோரின் விடுதலைக்காக போராடிய அரசியல் கட்சி தலைவர்களையும் சந்தித்து நன்றி தெரிவிக்கவும் திட்டமிட்டுள்ளார். விவரம் தெரிந்த பின்னர் தனது தாய், தந்தையை சிறைக்கு வெளியில் வைத்து முதன் முதலாக சந்திக்க உள்ளார் ஹரித்திரா. எனவே, அவர் சென்னை வரும் போது சிறப்பான வரவேற்பு அளிக்கவும் தமிழ் ஆர்வலர்கள் திட்மிட்டுள்ளனர்.
விடுதலையான பின்னர் நளினியும் முருகனும் மகள் ஹரித்திராவுடன் லண்டன் சென்று குடியேற திட்டமிட்டுள்ளனர். அவர்கள் சிறையில் இருந்து வெளியில் வந்ததும் இங்கிலாந்தில் குடியேறுவதற்கான ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்படும்.
பாஸ்போர்ட், விசா எடுப்பது போன்ற வழக்கமான நடைமுறைகளுக்கு மத்தியில் முருகனும், நளினியும் லண்டனில் குடியேறுவதில் இருக்கும் சட்ட சிக்கல்கள் பற்றியும் அவர்களது வக்கீல் புகழேந்தி ஆய்வு செய்து வருகிறார்.
இது தொடர்பாக அவர் கூறும்போது:- முருகனும், நளினியும் இங்கிலாந்தில் குடியேறுவதற்கு அந்நாட்டின் அனுமதியை பெற வேண்டும். பாஸ்போர்ட், விசா போன்றவற்றை எடுக்கும் போது ஏற்படும் நடைமுறை சிக்கல்களின் போது தமிழக அரசின் உதவியும் தேவைப்படும். சிறையில் இருந்து விடுதலையான பின்னர் முருகனும், நளினியும் இது தொடர்பாக முதலமைச்சருக்கு முறைப்படி கோரிக்கை வைக்கவும் திட்டமிட்டுள்ளனர் என்றார்.
நேற்று வேலூர் சிறைக்கு சென்று முருகனையும், நளினியையும் வக்கீல் புகழேந்தி, சென்று பார்த்தார். அப்போது இருவரும் தங்களது விடுதலை செய்ய போவதாக அறிவித்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கும் ஆதரவு அளித்த மற்ற அரசியல் கட்சி தலைவர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.