முதல்வரின் தனிப்பிரிவுக்கு மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல்

ஞாயிறு, 12 ஜூலை 2009 (11:18 IST)
தமிழக முதல்வரின் தனிப்பிரிவு அலுவலகத்திற்கு வந்த வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல் காரணமாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மின்னஞ்சல் அனுப்பிய மர்ம நபரைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

சென்னை கோட்டையில் செயல்பட்டு வரும் தனிப்பிரிவு அலுவலகத்துக்கு ஜெயசீலன் என்ற பெயரில் மிரட்டல் மின்னஞ்சல் ஒன்று வந்தது. அதில், சென்னை விமான நிலையம், துறைமுகம் மற்றும் முக்கியமான கட்டிடங்கள் போன்றவற்றில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி தமிழகம் முழுவதும் தாக்குதலுக்கு திட்டமிட்டுள்ளோம்.

வரு, 16ஆம் தேதி தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் குண்டுகள் வெடிக்கும். முடிந்தால் தடுத்துப்பாருங்கள். என்னையும் பிடித்துப்பாருங்கள் என்று கூறப்பட்டுள்ளது.

காவல்துறையினர் நடத்திய விசாரணையில் வடபழனி பகுதியில் உள்ள இன்டர்நெட் மையம் ஒன்றில் இருந்து மிரட்டல் மின்னஞ்சல் வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அந்த மின்னஞ்சலில் ஜெயசீலன் என்ற பெயர் அருகே தொலைபேசி எண்ணும் எழுதப்பட்டிருந்தது.

அதன் மூலம் சேலத்தை சேர்ந்த ஜெயசீலனை என்பவரை காவல்துறையினர் பிடித்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் மிரட்டல் மின்னஞ்சலுக்கும், ஜெயசீலனுக்கும் தொடர்பு இல்லை என்பதும், ஜெயசீலனை பழி வாங்குவதற்காக அவரது பெயரில் யாரோ மிரட்டல் கடிதம் அனுப்பி இருப்பதும் தெரியவந்தது.

இதையடுத்து தனிப்படை அமைத்து மிரட்டல் ஆசாமியை காவல்துறையினர் அமைத்து தேடி வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்