முதல்முறையாக திருச்சியில் ஆசிரியர் பயிற்சி படிப்பு கல‌ந்தா‌ய்வு தொடங்கியது

வெள்ளி, 3 ஜூலை 2009 (10:12 IST)
தமிழகம் முழுவதும் உள்ள ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கைக்கான கல‌ந்தா‌ய்வு திருச்சியில் முத‌‌ல் முறையாக நேற்று துவங்கியது.

அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் அரசு ஒதுக்கீட்டுக்கான இடங்களுக்கு, கல‌ந்தா‌ய்வு மூலம் மாணவ, மாணவியர் சேர்க்கப்படுகின்றனர்.

இந்த ஆண்டு 23,643 பேர் விண்ணப்பித்‌திரு‌ந்தனர். 21,595 பேருக்கு கல‌ந்தா‌ய்வு அழைப்பு அனுப்பப்பட்டது. வழக்கமாக சென்னையில் நடத்தப்படும் கல‌ந்தா‌ய்வு, இந்த ஆண்டு முதல்முறையாக திருச்சியில் நடத்தப்படுகிறது.

திருச்சி ஆர்.சி. ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் கல‌ந்தா‌ய்வை, பள்ளி கல்வித் துறை செயலர் குற்றாலிங்கம் நேற்று தொடங்கி வைத்தார். ஊனமுற்றோர் மற்றும் முன்னாள் ராணுவத்தினர், தியாகிகளின் வாரிசுகள் பங்கேற்றனர். நேற்று 250க்கும் அதிகமானோர் பயிற்சியில் சேர அனுமதி பெற்றனர்.

வரும் 6ஆ‌ம் தே‌தி முதல் 18ஆம் தேதி வரை சுந்தர் நகர், நாகம்மையார் ஆசிரியை பயிற்சி நிறுவனத்தில் அறிவியல் பாடப்பிரிவினருக்கும், புத்தூர் பெரியார் மாளிகை பெரியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் தொழிற்பிரிவினருக்கும், பிராட்டியூர் ஆக்ஸ்போர்டு ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் கலைப்பிரிவினருக்கும் கல‌ந்தா‌‌ய்வு நடத்தப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்