மீனவர் மீது தாக்குதல்: கண்டித்து சேவ் தமிழ் உண்ணாவிரதம்

சனி, 19 பிப்ரவரி 2011 (15:02 IST)
தமிழக மீனவர்கள் மீது சிறிலங்க கடற்படை தொடர்ந்து நடத்திவரும் கொலை வெறித் தாக்குதல்களைக் கண்டித்தும், தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன் பிடி உரிமையை பாதுகாக்கக் கோரியும் தகவல் தொழில் நுட்ப நெறிஞர்கள் அமைப்பான சேவ் தமிழ் இயக்கம் இன்று ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகிறது.

தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் நிறைந்துள்ள சோழிங்க நல்லூரில் இன்று காலை 8.30 மணிக்கு உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கியது. கவிஞர் இன்குலாப் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கி வைத்தார். 200க்கும் மேற்பட்ட தகவல் தொழில்நுட்ப நெறிஞர்கள் உண்ணாவிரத்தத்தில் கலந்துகொண்டனர்.

மும்பையில் தாஜ் நட்சத்திர விடுதியின் மீது நடந்த பயங்கரவாத தாக்குதலில் 140 பேர் கொல்லப்பட்டதற்கு பதறும் மத்திய அரசு, சிங்கள கடற்படையால் 500க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் கொல்லப்பட்ட பின்னும் இலங்கை அரசுடன் நட்பு பாராட்டுவது ஏன் என்று இன்குலாப் கேட்டார்.

நாகை மாவட்டம் வெள்ளப்பள்ளம் கிராமப் பஞ்சாயத்துத் தலைவர் அஞ்சப்பன், சிங்கள மீனவர்களால் தாங்கள் அனுபவித்துவரும் துன்பத்தை விரிவாக விளக்கிப் பேசினார். இப்படிப்பட்ட நிகழ்வுகள் இதற்கு மேலும் தொடரக் கூடாது என்று அவர் உருக்கமாக கேட்டுக்கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய தமிழ்.வெப்துனியா.காம் இணையத்தளத்தின் ஆசிரியர் அய்யநாதன், தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன் பிடி உரிமையைப் பறிக்கும் இந்தியா, சிறிலங்க கடல் எல்லை வரைவு ஒப்பந்தத்தை இரத்து செய்ய வேண்டும் என்றார்.

பல நூறு ஆண்டுகளாக தமிழக மீனவர்களும், ஈழத் தமிழ் மீனவர்களும் அனுபவித்துவந்த பாரம்பரிய மீன் பிடி உரிமையை பறிக்கும் ஒப்பந்தம், மக்கள் நலனிற்கு முரணானது. அது மீனவர்களின் வாழ்வுரிமையை பறிக்க காரணமாகிவிட்டது. எல்லைத்தாண்டிச் சென்று மீனவர்கள் மீன் பிடிப்பதை இரு நாட்டு மீனவர்களும் ஆட்சேபிக்க வில்லை என்று கூறிய அய்யநாதன், இழுவைப் படகுகளில் மீன் பிடிக்கும்போது பயன்படுத்தப்படும் வலைகள் மீன்வர்களுக்கிடையே பிரச்சனையாகிறது என்றும், அதனை அடிப்படை உரிமைப் பிரச்சனையோடு சேர்த்து குழப்ப அனுமதிக்கக் கூடாது என்று பேசினார்.

இந்நிகழ்ச்சியில் மக்கள் சமூக உரிமைக் கழகத்தின் தமிழக செயலர் பாலமுருகன், எழுத்தாளர் ஜோ டி குரூஸ், வழக்கறிஞர் புகழேந்தி, தோழர் தியாகு உள்ளிட்ட பலர் பேசினர்.

கோரிக்கைகள்:

1. இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடைப்பட்ட கடல் பகுதியி்ல் தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன் பிடி உரிமையை மறுக்காதீர். பாக் நீரிணையை இரு நாட்டு மீனவர்களுக்கும் பொதுவான மீன் பிடி மண்டலமான அறிவித்திடுக.

2. சிங்களக் கடற்படையால் தாக்கப்பட்டுக் காயமடைந்த தமிழின மீனவர்களுக்கு மருத்துவம், நிதி, வேலை வாய்ப்பு உள்ளிட்ட அனைத்து உதவிகளும் வழங்குக.

3. சிங்களக் கடற்படையினர் தாக்குதலில் இருந்து தப்பிக்கக் கடலில் குதித்துக் கரை திரும்பாத தமிழக மீனவர்களின் குடும்பங்களுக்குத் துயர்தணிப்பு உதவி வழங்குவதற்கென சட்டங்களை உரிய வகையில் திருத்துக.

4. 500க்கும் மேற்பட்ட தமிழக மீன்வர்களைக் கொன்றொழித்த சி்ங்கள இன வெறி அரசுடனான அரசியல், அரச தந்திர, பொருளாதார, பண்பாட்டு உறவுகளைத் துண்டித்திடுக.

இது மட்டுமின்றி, “இந்திய மக்களே, சிங்கள இனவெறிக்கு சரியான பாடம் புகட்டவும், கொல்லப்பட்ட தமிழர்களுக்கு நீதி கிடைக்கவும் சுற்றுலா, வணிகம், விளையாட்டு உள்ளிட்ட அனைத்துத் தளங்களிலும் இலங்கையை புறக்கணிப்பீர்” என்று சேவ் தமிழ் இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்