மீனவர் பிரச்சனை: ம‌த்‌திய அரசை க‌ண்டி‌த்து தே.மு.தி.க. தொட‌ர் ஆர்ப்பாட்டம்

புதன், 8 ஜூலை 2009 (10:35 IST)
பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்தும், மீனவர்கள் பிரச்சனையை தீர்க்கக்கோரி ம‌த்‌திய அரசை க‌ண்டி‌த்து‌ம் தே.மு.தி.க. சார்பில் தமிழ்நாடு முழுவதும் நாளை முத‌ல் வரு‌ம் 18ஆ‌ம் தே‌தி வரை தொட‌ர் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அ‌க்க‌ட்‌சி‌‌யி‌ன் தலைவ‌ர் விஜயகாந்த் கூ‌றியு‌ள்ளா‌ர்.

இது தொட‌‌ர்பாக அவ‌ர் வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள அ‌றி‌க்கை‌யி‌ல், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஆட்சிக்கு வந்தவுடன் செய்த முதல் காரியமாக பெட்ரோல்-டீசல் விலையை உயர்த்தியதுதான். இதனால் எந்த கூடுதல் வருமானமும் இல்லாத ஏழை, நடுத்தர மக்கள் குடும்பத்தின் செலவை சமாளிக்க முடியாமல் திணறி திண்டாடுகின்றனர்.

இத்தகைய கஷ்டங்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் மாதந்தோறும் ஏழை மக்களுக்கு ஒரு குறிப்பிட்ட அளவு குடும்ப உதவி நிதி வழங்கவேண்டும் என்று நான் தொடர்ந்து வற்புறுத்தி வருகிறேன். இந்திய அரசு இத்தகைய நடவடிக்கை எதையும் மேற்கொள்ளவில்லை.

விடுதலைப்புலிகள் இயக்கத்தை ஒடுக்குகிறோம் என்ற பெயரால் தமிழக மீனவர்களை சிங்கள அரசு தாக்கியது. ஆனால் இப்போது விடுதலைப்புலிகள் இயக்கத்தை அழித்துவிட்டோம் என்று அதே அரசு இன்று ஆர்ப்பரிக்கின்றது. அப்படியிருக்க ஏன் இப்பொழுது மீண்டும் ராமே‌ஸ்வரம் மீனவர்களை தாக்கவேண்டும்.

தமிழக மீனவர்கள் 21 பேர் கடந்த 5ஆ‌ம் தேதி சிங்கள இன வெறியர்களால் கடத்தப்பட்டுள்ளனர். மத்திய அரசின் இந்த மக்கள் விரோத போக்கை கண்டித்து தே.மு.தி.க. சார்பில் மாவட்டம் தோறும் நாளை முதல் 18ஆ‌ம் தேதி வரை ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இந்த ஆர்ப்பாட்டம் மத்திய அரசு அலுவலகம் முன்பாகவோ அல்லது மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலம் முன்பாகவோ நடைபெறும்.

நாளை காஞ்‌சிபுரம் மாவட்டத்தில் துணை செயலர் ஏ.ஆர்.இளங்கோவன் தலைமையிலும், 15ஆ‌ம் தேதி சென்னையில் அவைத்தலைவர் பண்ருட்டி எஸ்.ராமச்சந்திரன் தலைமையிலும், 15ஆ‌ம் தேதி திருவள்ளூர் கிழக்கு மாவட்டத்தில் மாநில வழக்கறிஞர் அணி செயலர் டாக்டர் எஸ்.தட்சிணாமூர்த்தி தலைமையிலும், 16ஆ‌ம் தேதி திருவள்ளூர் மேற்கு மாவட்டத்தில் தொழிற்சங்க பேரவை தலைவர் வேல்முருகன் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் எ‌ன்று விஜயகாந்த் கூறியுள்ளார்.