மழையின்மை; நிலக்கடலை விவசாயம் பாதிப்பு

திங்கள், 29 ஜூலை 2013 (14:52 IST)
FILE
ஈரோடு மற்றும் சுற்றுப்பகுதியில் நடப்பு ஆண்டு போதிய மழை பெய்யாத காரணத்தால் மானாவரி நிலங்களில் விதைக்கப்பட்ட நிலக்கடலை செடி வாடி நிற்கிறது.

ஈரோடு மாவட்டம் எல்லைபகுதியில் உள்ளது புன்செய்புளியம்பட்டி. இதன் அருகே உள்ள விண்ணப்பள்ளி, புங்கம்பள்ளி, நல்லூர், காராப்பாடி உள்ளிட்ட பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கர் மானாவரி நிலங்கள் உள்ளது. இந்த நிலங்கள் மழை பெய்தால் மட்டும் வளம் பெறும்.

கடந்த மாதம் ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு பகுதியில் மழையில்லாத போதிலும் புன்செய்புளியம்பட்டி மற்றும் சுற்றுப்பகுதியில் மூன்று முறை பலத்த மழை பெய்தது. இதனால் இப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். தொடர்ந்து மழை பொய்க்காமல் வரும் என்ற நம்பிக்கையில் தங்கள் மானாவரி நிலங்களை உழுது நிலக்கடலை விதைத்தனர்.

500 ஏக்கர் பரப்பளவில் நிலக்கடலை விதைக்கப்பட்டு அது முளைத்து செடியும் வளமாக வந்தது. நிலக்கடலை முளைத்தபிறகு அதற்கு தண்ணீர் அவசியம். தற்போது மழை இல்லாத காரணத்தால் கடும் வறட்சி நிலை ஏற்பட்டது. இதனால் முளைத்த நிலக்கடலை செடி மேற்கொண்டு வளர மழையின்றி தற்போது வாடி நிற்கிறது.

எப்படியும் மழை வரும் விதைத்த நிலக்கடலையை வீணின்றி அறுவடை செய்துவிடலாம் என்று நம்பிக்கை வைத்த விவசாயிகள் தற்போது நடவு செலவு வீணாகிவிடுமோ என்ற அச்சத்தில் உள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்