மருத்துவ சிறப்பு நிபுணர் படிப்பில் தகுதி அடிப்படையில் மட்டுமே மாணவர் சே‌ர்‌க்கை: உய‌ர்‌ ‌நீ‌திம‌ன்ற‌ம்

வியாழன், 21 மே 2009 (10:52 IST)
மருத்துவ சிறப்பு நிபுணர் படிப்பில், இடஒதுக்கீடு முறையை பின்பற்றாமல் தகுதி அடிப்படையில் மட்டுமே மாணவர்களை சேர்க்க வேண்டும் என்று சென்னை உய‌ர்‌ ‌நீ‌திம‌ன்ற‌ம் தீர்ப்ப‌ளி‌த்து‌ள்ளது.

2007ஆம் ஆண்டு மே மாதம் 2ஆ‌ம் தேதி தமிழக அரசு ஒரு உத்தரவை பிறப்பித்தது. அ‌தி‌ல், 2009-2010 கல்வி ஆண்டில் எம்.சி.எச். (நரம்பியல் அறுவை சிகிச்சை) என்ற 5 ஆண்டு மருத்துவ சிறப்பு நிபுணர் (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) படிப்புக்கு 8-க்கு மேற்பட்ட இடங்கள் இருந்தால் இடஒதுக்கீடு மூலம் நிரப்பப்படும் என்றும், 8-க்கு கீழ் இருந்தால் ரோஸ்டர் முறை என்று அழைக்கப்படும் சுழற்சி இடஒதுக்கீடு முறையில் மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள் என்றும் அந்த உத்தரவில் கூறப்பட்டிருந்தது.

இதை எதிர்த்து மரு‌த்துவ‌ர் பரத் உள்பட பல மரு‌த்துவ‌ர்க‌ள் சென்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் வழக்கு தொடர்ந்தனர். அந்த மனுவில், எம்.சி.எச். படிப்பு என்பது 3 ஆண்டு முதுநிலை பட்டப்படிப்புக்கு பின்பு மேலும் 2 ஆண்டுகள் படிக்கக்கூடிய சிறப்பு படிப்பாகும். ஏற்கனவே உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌ம் வழங்கிய தீர்ப்பு அடிப்படையில் இதுபோன்ற சிறப்பு படிப்புக்கு இடஒதுக்கீடு வழங்க முடியாது.

சுழற்சி முறையில் இடஒதுக்கீட்டை பின்பற்றினால் குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு அந்த ஆண்டில் இடம் கிடைக்காமல் போய்விடும். அந்த சமூகத்தை சேர்ந்த மாணவர்கள் சுழற்சி முறைக்காக ஒரு ஆண்டுக்கு மேல் காத்திருக்க வேண்டியுள்ளது. பணி நியமனத்தில் மட்டுமே சுழற்சி இடஒதுக்கீடு முறை பின்பற்ற முடியுமே தவிர, இந்த முறை மாணவர்கள் சேர்க்கைக்கு பொருந்தாது எ‌ன்று மனுவில் கூறியிருந்தனர்.

இந்த மனுவை நீதிபதிகள் பி.ஜோதிமணி, அருணாஜெகதீசன் ஆகியோர் விசாரித்தனர். இந்த வழக்கில் நீதிபதிகள் அளித்த தீர்ப்‌பி‌ல், ''தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் கல்வி நிறுவனம் மற்றும் பணி நியமனம், இடஒதுக்கீடு சட்டம் 4-வது பிரிவின்படி மாணவர்கள் சேர்க்கையில் இடஒதுக்கீட்டை பின்பற்றலாம்.

5-வது பிரிவானது பணி நியமனம் செய்யும்போது குறிப்பிட்ட பணியிடங்கள் இல்லாவிட்டால் சுழற்சி இடஒதுக்கீடு முறையில் பணி நியமனம் செய்யலாம் என்று கூறுகிறது. ஆகவே மாணவர்கள் சேர்க்கை விஷயத்தில் சுழற்சி இடஒதுக்கீடு முறையை அமல்படுத்த முடியாது. இது சமூக வளர்ச்சிக்கு உகந்ததல்ல.

ஆகவே, மாணவர்கள் சேர்க்கை விஷயத்தில் தேவையான இடம் இல்லாவிட்டால், சுழற்சி முறையை கடைபிடிக்கலாம் என்பதை தவறானது என்று தீர்மானிக்கிறோம். அதை அனுமதிக்க முடியாது. எம்.சி.எச். என்பது வெறும் முதுநிலை படிப்பு அல்ல. இது சிறப்பு மருத்துவ நிபுணர் படிப்பாக இருப்பதால், இதில் இடஒதுக்கீடு வரமுடியாது. தகுதி அடிப்படையில்தான் மாணவர்களை சேர்க்க வேண்டும். எம்.டி.எஸ். முதுநிலை படிப்பில் 8 இடங்களுக்கு குறைவாக இருந்தால் சுழற்சி இடஒதுக்கீடு முறையை கடைபிடிக்கக் கூடாது'' எ‌ன்று ‌‌நீ‌திப‌திக‌ள் ‌தீ‌ர்‌ப்ப‌ளி‌த்தன‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்