மதுவிலக்கினால் ஏற்படும் இழப்பை மத்திய அரசு வழங்கினால் தமிழகத்தில் மதுவிலக்கு: நத்தம் பேச்சு

வியாழன், 21 ஜனவரி 2016 (19:47 IST)
மதுவிலக்கினால் ஏற்படும் வருவாய் இழப்பை மத்திய அரசு வழங்கினால், உடனடியாக பூரண மதுவிலக்கை தமிழகத்தில் அமல்படுத்துவோம் என்று மதுவிலக்குத் துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
 

 











 
 
தமிழகத்தில் மதுவிலக்கு கொண்டு வர வேண்டும் என, தேமுதிக உறுப்பினர் பார்த்தசாரதி சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பினார். இதுகுறித்து சட்டப்பேரவையில் காரசார விவாதம் நடைபெற்றது. இதற்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்துவது சாத்தியம் இல்லை என்று உறுதி பட தெரிவித்தார். மேலும், மதுவிலக்கினால் ஏற்படும் வருவாய் இழப்பை மத்திய அரசு வழங்கினால், உடனடியாக மதுவிலக்கை அமல்படுத்துவோம் என்றும் அவர் கூறினார்
 
 
தமிழகத்தில் மட்டும் அமல்படுத்தினால், கள்ளச்சாரயம் பெருகுவதோடு தமிழகத்தின் வருவாய் பிற மாநிலங்களுக்குப் போய்விடும் என்றும் இந்தியா முழுவதும் மதுவிலக்கு வருமானால் தமிழகத்தில் முதலில் மதுவிலக்கு அமல்படுத்தப்படும் எனவும் அவர் கூறினார்.
 
தமிழகத்தை சுற்றியுள்ள மாநிலங்களில் மதுவிலக்கு அமல்படுத்தாத நிலையில், தமிழகத்தில் அமல்படுத்தினால் மற்ற மாநிலங்களுக்கு வருவாய் சென்று விடும் என்று அவர் தெரிவித்தார்.
 
கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் மதுவிலக்கு கோரிக்கையை வலியுறுத்தியபோது, கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களில் மதுவிலக்கு அமலில் இருக்கிறதா என்று கேள்வியெழுப்பிய நத்தம் விஸ்வநாதன், மாநிலத்துக்கு மாநிலம் மாறுபட்ட கொள்கைகளைக் கொண்டிருக்கும் கம்யூனிஸ்டுகளுக்கு மதுவிலக்குக் குறித்துப் பேச தார்மிக உரிமை இல்லை என்று அவர் குறிப்பிட்டதால் பேரவையில் இரு கட்சிகளுக்கும் இடையே விவாதம் ஏற்பட்டது.

வெப்துனியாவைப் படிக்கவும்