மதுரை ஆதீன அற‌க்க‌ட்டளை கலை‌ப்பு- நித்யானந்தா மனு தள்ளுபடி

செவ்வாய், 29 ஜனவரி 2013 (12:21 IST)
FILE
மதுரை ஆதீன அறக்கட்டளை கலைக்கப்பட்டது முறையல்ல என்று கூறி ஆதீனத்திற்கு எதிராக நித்யானந்தா தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து மதுரை ‌நீ‌திம‌ன்ற‌ம் உத்தரவிட்டது.

தமிழக இந்து அறநிலையத்துறை ஆணையர் தனபால், மதுரை மாவட்ட முதன்மை சார்பு நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்து இருந்தார். அதில், ''இந்து அறநிலையத்துறைக்கு தகவல் தெரிவிக்காமல் ஆதீனம் தரப்பில் 'மதுரை ஆதீனம் அறக்கட்டளை' தொடங்கப்பட்டுள்ளது. ஆதீன மடத்தின் சொத்துக்களை அபகரிக்கும் நோக்கத்தில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே மதுரை ஆதீனம் அருணகிரிநாதரை அந்த பொறுப்பில் இருந்து நீக்கிவிட்டு, அடுத்த ஆதீனம் நியமிக்கப்படும்வரை மடத்தின் பொறுப்புகளை இந்து அறநிலையத்துறையிடம் ஒப்படைக்க உத்தரவிட வேண்டும்' என்று கூறப்பட்டு இருந்தது.

இதேபோ‌ல் மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் தா‌க்க‌ல் செ‌ய்த மனு‌வி‌ல், ''மதுரை ஆதீனம் அறக்கட்டளை கலைக்கப்பட்டுள்ளது. எனவே அந்த பெயரில் பதிவாளர் அலுவலகத்தில் மேற்கொள்ளப்பட்ட பதிவை ரத்து செய்ய வேண்டும் என்றும், மதுரை ஆதீன மடத்தில் நித்தியானந்தாவும், அவருடைய தரப்பினரும் நுழைய நிரந்தரமாக தடை விதிக்க வேண்டும்' என்றும் கூறப்பட்டு இருந்தது.

இத‌ை‌த் தொட‌ர்‌ந்து நித்யானந்தா தா‌க்க‌ல் செ‌ய்த மனு‌வி‌ல், மதுரை ஆதீனம் அறக்கட்டளையை நானும், அருணகிரிநாதரும் சேர்ந்து சட்டப்படி உருவாக்கினோம். அறக்கட்டளையை கலைக்க விரும்பினால் முதன்மை அரசு வழ‌க்க‌‌றிஞ‌ரிடம் முன் அனுமதி பெற வேண்டும். அறக்கட்டளையில் உள்ள எனக்கும் தகவல் தெரிவிக்க வேண்டும். ஆனால், அதுபோன்று எந்தவித அனுமதியும் பெறாமல் அறக்கட்டளை கலைக்கப்பட்டுள்ளது. அவ்வாறு கலைத்தது தவறு. சட்டப்படி அறக்கட்டளையை கலைக்காமல் அறக்கட்டளைக்கான பதிவை ரத்து செய்ய வேண்டும் என்று அருணகிரிநாதர் தாக்கல் செய்துள்ள மனுவை ஏற்கக்கூடாது. அந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் எ‌ன்று மனு‌வி‌ல் கூ‌றி‌யிரு‌ந்தா‌ர்.

இந்த மனுவுக்கு அருணகிரிநாதர் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், சாதாரணமாக உருவாக்கப்படும் அறக்கட்டளைகளுக்குத்தான் நித்யானந்தா கூறியுள்ள விதிமுறைகள் பொருந்தும். இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்கள் மற்றும் மதுரை ஆதீனம் போன்ற மடங்களில் அமைக்கப்படும் அறக்கட்டளைகளை கலைக்க அந்த விதிகள் பொருந்தாது. எனவே சட்டப்படியான அடிப்படை காரணங்கள் இல்லாததால் நித்தியானந்தாவின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.

இந்த மனுக்கள் நீதிபதி கே.குருவையா முன்பாக விசாரணைக்கு வந்தது. அ‌ப்போது, ‌விசாரணை முடிவில் ஆதீனம் மனுவை தள்ளுபடி செய்யக்கோரிய நித்யானந்தாவின் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

வெப்துனியாவைப் படிக்கவும்